"அவரு கண்டிப்பா என்னைத் தேடி வருவாரு... பல ஆண்டுகள் காத்திருந்த 'காதலி'... இறுதியில் மகன் கண்டுபிடித்த 'உண்மை'... மனதை 'உருக' வைக்கும் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில், அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்த அமெரிக்க வீரரான வில்பெர்ட் வைலி (Wilbert Wiley) என்பவர், பெட்டி (Betty) என்ற பெண் ஒருவரை அங்குள்ள நடன விடுதி ஒன்றில் சந்தித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் காதல் வயப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், வில்பெர்ட் அமெரிக்கா திரும்பிச் சென்றுள்ளார். அமெரிக்கா கிளம்பிச் சென்ற தனது காதலர் திரும்ப வருவார் என காத்திருந்த பெட்டிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
நீண்ட நாட்களாக வில்பெர்ட் திரும்ப வராததால், அவர் இறந்து போயிருப்பார் என எண்ணி, வேறொருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பெட்டி. வில்பெர்ட் மற்றும் பெட்டியின் மகனான பில், தனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் தன்னைத் தேடி வந்திருப்பார் என தன் தாய் அவ்வளவு உறுதியாக இருந்ததால், தனது தந்தையைத் தேட பில் பெரிய அளவில் முயற்சிகள் செய்யவில்லை.
இந்நிலையில், தனது தாய் பெட்டி இறந்த பிறகு, தனது தந்தை யார் என்பதை அறிந்து கொள்வதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளார் பில். தனது டிஎன்ஏவிலுள்ள 'Y' குரோமோசோம் மூலம் பில்லின் வம்சாவளி யார் என்பதை மருத்துவர் ஒருவர் உதவியுடன் அறிந்துள்ளார். அதன்படி, தனது தந்தையான வில்பெர்ட்டிற்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், வில்பெர்ட் ஏன் தனது தாயை விட்டுச் சென்றார் என்பதற்கான உருக்கமான காரணமும் பில்லுக்கு தெரிய வந்துள்ளது. வில்பெர்ட் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். பெட்டியோ, பிரிட்டனைச் சேர்ந்தவர். அந்த காலத்தில், கலப்பு திருமணம் செய்வது என்பது அமெரிக்காவில் சட்ட விரோதமான செயலாகும்.
இதனால், வில்பெர்ட் நினைத்திருந்தால் கூட, அவரால் பிரிட்டன் வந்து பெட்டியை திருமணம் செய்திருக்க முடியாது. டிஎன்ஏ மூலம் தனது உறவினரைத் தேடி கண்டுபிடித்த பில்லிற்கு தற்போது 75 வயதாகும் நிலையில், அவரது தந்தை மற்றும், ஒன்று விட்ட சகோதரரும், அதாவது வில்பெர்ட்டின் மகனும் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்துள்ளது.
வில்பெர்ட்டின் சகோதரரின் மகள்கள் இரண்டு பேர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்து கொண்ட பில், அவர்களிடம் காணொளி காட்சி மூலம் சந்தித்து பேசியுள்ளார். 'எனக்கு 75 வயதாகிறது. எனக்கு யாரவது உறவினர்கள் இருக்க மாட்டார்களா என இத்தனை ஆண்டுகள் ஏங்கிக் கொண்டிருந்தேன்' என பில் உணர்ச்சிவசப்பட்டார்.
மறுபுறம் அவரது சகோதரிகள், நாங்கள் இருக்கிறோம் எனக்கூற, ஸ்க்ரீனைத் தாண்டி உங்கள் அருகே வந்து உட்கார்ந்து பேச ஆசைப்படுகிறேன் என பில் தனது உருக்கத்தை வெளிப்படுத்த, தனது தந்தையை போல பில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர் சகோதரிகள். பல வருட தேடலுக்கு பின், தனக்கு உறவினர்கள் கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சி கொண்டுள்ளார் பில்.
மற்ற செய்திகள்