இன்னும் ‘ஒரு’ நாள்ல தேர்தல்.. பரபரப்பை எகிற வைத்த ‘புதிய’ கருத்துக்கணிப்பு.. மக்கள் ஆதரவு யாருக்கு அதிகம்..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் நாளை (03.11.2020) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் முக்கிய பிரச்சனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர். அதனால் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார். இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் என்பிசி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் டிரம்பைவிட ஜோ பிடன் 10 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 42 சதவீதம் பேரும், ஜோ பிடனுக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
12 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத வாக்காளர்களும், ஜோ பிடனுக்கு ஆதரவாக 51 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த மாநிலங்களில் ஜோ பிடன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தபால் மூலமாகவோ அல்லது நேரில் முன்கூட்டியே வாக்களித்த வாக்காளர்களிடையே ஜோ பிடனுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. அதேசமயம் இன்னும் வாக்களிக்காத புதிய வாக்காளர்களிடையே டிரம்புக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்