Russia – Ukraine Crisis: நெனச்சத செஞ்சு காட்டிய உக்ரைன்..இன்னும் இப்படி ஒரு சிக்கல் இருக்கா...?
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மோசமான தாக்குதல் ஒன்றினை சந்தித்து வருகிறது உக்ரைன். அந்த நாட்டின் மீது போர் தொடுப்பதாக பிப்ரவரி 24 ஆம் தேதி அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனை தொடர்ந்து சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
உடனடியாக வெளியேறுங்கள்
இந்நிலையில் நேற்று வீடியோ ஒன்றினை உக்ரைன் அதிபர் வெளியிட்டார். அதில்," ரஷ்யா தனது தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். ரஷ்ய வீரர்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டு இங்கிருந்து வெளியற வேண்டும். ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும். அவசர வழிமுறைகளை பயன்படுத்தி இதனை செய்யலாம் என நான் நம்புகிறேன்" என்றார்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்ப படிவங்களில் உக்ரைன் அதிபர், துணை அதிபர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இன்னும் ஒரு சிக்கல்
ஐரோப்பிய யூனியனில் அவசர விதிமுறைகளுக்கு உட்பட்டு உக்ரைனை இணைத்துக்கொள்ள ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, செக் குடியரசு ஆகிய நாடுகள் ஐரோப்பிய யூனியனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் இணைத்துக்கொள்ள வேண்டுமானால் அனைத்து ஐரோப்பிய உறுப்பினர்களின் ஆதரவும் உக்ரைனுக்கு இருக்க வேண்டும்.
இதுபற்றி பேசிய ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்செல்," உக்ரைனை ஐரோப்பிய கவுன்சிலுடன் இணைப்பது குறித்து யூனியனுக்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகள்" உள்ளன" என்றார்.
பொதுவாக, ஐரோப்பிய யூனியனில் ஒரு நாடு இணைய வேண்டுமானால், யூனியன் அங்கத்தினர் முன்பு அந்த கோரிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு அதிக காலம் பிடிக்கும். சமீபத்தில் குரோஷியா ஐரோப்பிய யூனியனில் தன்னை இணைத்துக்கொண்டது. இதற்கான பேச்சுவார்த்தைகள் சுமார் 10 ஆண்டுகளுக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த விஷயத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள். இந்நிலையில் வரும் மார்ச் 11, 12 ஆம் தேதிகளில் ஐரோப்பிய கவுன்சில் மாநாடு நடைபெறும் எனவும் இந்த கூட்டத்தில் உக்ரைனை இணைத்துக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனவும் ஐரோப்பிய கவுன்சில் அதிகாரிகள் தெரிவிதித்துள்ளனர்.
ஆக, இன்னும் பத்து நாட்களில் உக்ரைன் விவகாரத்தில் நிலையான தீர்வு எட்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேவேளையில், நாளுக்குநாள் உக்ரைனில் உக்கிரமடையும் போரால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதே உலக தலைவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
மற்ற செய்திகள்