72 வயசு முதியவருக்கு... 10 மாசத்துல... 43 முறை கொரோனா பாசிட்டிவ்!.. என்ன நடக்குதுனே புரியாம திகைத்து நிற்கும் மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

72 வயது முதியவர் ஒருவருக்கு, கடந்த 10 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட முறை கொரோனா உறுதியாகிக்கொண்டே இருந்துள்ளது. 10 மாத சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அவர் மீண்டிருக்கிறார். இவ்வளவு நீண்ட நாட்கள் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது, இதுவே முதன் முறை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

72 வயசு முதியவருக்கு... 10 மாசத்துல... 43 முறை கொரோனா பாசிட்டிவ்!.. என்ன நடக்குதுனே புரியாம திகைத்து நிற்கும் மருத்துவர்கள்!

மேற்கு இங்கிலாந்தை சேர்ந்த டேவ் ஸ்மித் என்ற அந்த முதியவர், பிரிஸ்டால் பகுதியில் வாழும் ஒய்வுபெற்ற ஓட்டுநர் பயிற்சியாளர் ஆவார். கடந்த 10 மாதங்களில், இவருக்கு 43 முறை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 7 முறை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்திருக்கிறார். சில நேரத்தில், சிகிச்சையின்போது இறந்துவிடுவார் என நினைத்து, இவருக்கு பலமுறை இறுதிசடங்கு திட்டமிடப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், "நான் உயிரோடு இருப்பேன் என நானே நம்பவில்லை. என் குடும்பத்தினரை எல்லாம் அழைத்து, என் இருப்பு இல்லாமல் போகுமென கூறி, அவர்களையும் சமாதானப்படுத்தினேன். எல்லோரிடமும், குட்பை கூட சொல்லிவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.

இதே பேட்டியில் இவர் மனைவி லிண்டாவும் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "பலமுறை அவர் மீண்டுவருவார் என நாங்கள் நம்பாமல் இருந்திருக்கிறோம். இந்த ஒருவருடம், எங்கள் வாழ்வின் நரக காலம்" எனக்கூறியுள்ளார்.

பிரிஸ்டால் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு பிரிஸ்டால் அறக்கட்டளையை சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் எட் மோரான் பேசுகையில், "அவர் உடலில், கொரோனா வைரஸ் இருந்துக்கொண்டேதான் இருந்தது. அது அழியவே இல்லை. இவருடைய உடலிலுள்ள மாதிரிகளை, பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுப்பிவைத்து, இது அழியாமல் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது என்பதை நிரூபிக்க முடிந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருந்த அந்த நபர், இறுதியாக காக்டெயில் சிகிச்சை தரப்பட்டு, தற்போது குணமாக்கப்பட்டுள்ளார். இந்த வகை சிகிச்சை பிரிட்டன் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற போதிலும், தற்போது அவர் மீதான இரக்கத்தை அடிப்படையாக வைத்து, அவருக்கு மட்டும் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.

"என் வாழ்க்கை எனக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது போல உள்ளது" எனக்கூறியுள்ள ஸ்மித், காக்டெயில் மருந்து எடுத்துக்கொண்டு 45 நாள்கள் கழித்து, ஒருவழியாக கொரோனாவிலிருந்து மீண்டிருக்கிறார்.

ஸ்மித் உடலில் மட்டும் ஏன் இந்த நீண்ட பாதிப்பை வைரஸ் ஏற்படுத்தியது என்பது மருத்துவர்களுக்கே தெரியவில்லை. இதற்கு முன்னர் நுரையீரல் சிக்கல் இருந்தும், லுகேமியாவிலிருந்து சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ள அவர், நல்ல தெம்புடன் தன்னுடைய பேத்திக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்துவருகிறார்.

 

மற்ற செய்திகள்