டிரம்ப் போட்ட ஒரு ‘ட்வீட்’.. அடுத்த சில நிமிடத்தில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ட்விட்டர் நிர்வாகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக முடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் சில வீடியோக்களை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோக்கள் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கின.
இதனைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கம் 12 மணிநேரங்களுக்கு முடக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டிரம்பின் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடராமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்தும் டிரம்ப் ட்வீட் செய்தார். அதில், ட்விட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தை தடை செய்வதாகவும், தன்னை பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறினார். தனது கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில் சொந்த தளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் அந்த ட்வீட்டுகளும் நீக்கப்பட்டன.
முன்னதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதராவாளர்கள் நடத்திய போராட்டத்தில் 4 பொதுமக்கள், ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தை அடுத்து ட்விட்டரில் டிரம்பை தடை செய்ய வேண்டும் என ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் 350 பேர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்