‘ஆழ்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’!.. ‘மக்கள் சீக்கிரம் பாதுகாப்பான இடங்களுக்கு போங்க’.. சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆழ்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து நியூஸிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் கிழக்கு பகுதியில், ஆக்லாந்து நகரில் இருந்து சுமார் 256 மைல்கள் தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
ஆழ்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து நியூஸிலாந்து அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியைச் சுற்றி சுமார் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடற்கரை பகுதிகள் வசிக்கும் மக்கள் சீக்கிரம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நியூஸிலாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி நியூ கலிடோனியாவின் கிழக்கு பகுதியில் நள்ளிரவு ஆழ்கடலில் 7.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் சுனாமி அலைகள் எழக்கூடும் என அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் மீண்டும் நியூஸிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர். பசிபிக் நெருப்பு வளையம் எனப்படும் பூகம்ப அபாய பகுதியில் நியூஸிலாந்து அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்