'கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா'... 'எப்பா சாமி ஆள விடுங்க'... என்ன 'டிரம்ப்' இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாரு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊரடங்கு தொடர்பான அனைத்து முடிவுகளையும் நான் தான் எடுப்பேன் என, கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதற்கான பொறுப்பை அதிபர் டிரம்ப், மாநில ஆளுநர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
உலகிலேயே தற்போது அமெரிக்காவில்தான் கொரானாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அங்கு தான் அதிக மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலக அளவில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 ஆயிரத்து 617 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்குப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியே சென்றால், நிச்சம் அதன் விளைவுகள் படு மோசமாக இருக்கும் என்பதை உணர்ந்த அரசு, பொருளாதாரத்தைச் சரிசெய்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராயத் தொடங்கியுள்ளது. அதன்படி அதிக பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிக நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இத்தொடர்ச்சியாக வரும் மாதங்களில் பொருளாதாரத்தைச் சரி செய்வது குறித்தும், மூன்று கட்டங்களாக ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் மாநில ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார். அதன்படி மாநிலங்களின் ஆளுநர்களே ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ளும் நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என அதிபர் டிரம்ப் தற்போது கூறியுள்ளார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இது சரியான முடிவா என மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.