"இத்தனை கப்பலும் ஆத்துக்குள்ள தான் இருந்திருக்கு".. வறட்சியால் வற்றிப்போன தண்ணீர்.. வெளியே வந்த 2 ஆம் உலகப்போர் மர்மம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்செர்பியாவில் பாயும் புகழ்பெற்ற டான்யூப் ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து, அதனுள் மூழ்கியிருந்த இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மானிய கப்பல்கள் வெளியே வந்துள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெப்ப அலை
ஐரோப்பா முழுவதும் வெப்ப அலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வெப்பத்தினை தவிர்க்க அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரிட்டனில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. முக்கிய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பின் அளவு கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. மேலும், காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் அரசுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன.
இரண்டாம் உலகப்போர்
இந்நிலையில், செர்பியாவில் பாயும் டான்யூப் நதியில் நீரின் அளவு கணிசமாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாக உள்ளே மூழ்கிப்போன ஜெர்மானிய படையின் கப்பல்கள் வெளியே தலைகாட்ட துவங்கியுள்ளன.
இரண்டாம் உலகப்போர் உக்கிரமடைந்த நேரத்தில் கருங்கடலை பாதுகாக்கும் பணியில் இந்த கப்பல்கள் ஈடுபட்டு வந்தன. ஆனால், சோவியத் யூனியனின் தாக்குதல் காரணமாக பல ஜெர்மானிய கப்பல்கள் இந்த நதியில் மூழ்கின. 1944 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தாக்குதலில் ஜெர்மானிய கப்பற்படை கடும் சேதத்தை சந்தித்தது.
டான்யூப் நதி
டான்யூப் நதி ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரும் ஆறாகும். இது 10 நாடுகள் வழியே பாய்ந்தோடுகிறது. செர்பியாவின் பிரஹோவோ பகுதியில் பாயும் இந்த நதியின் அகலம் 330 மீட்டர் மட்டுமே. ஐரோப்பாவில் வீசிவரும் வெப்ப அலை காரணமாக இந்த ஆற்றின் தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால் இதுவரையில் 20க்கும் மேற்பட்ட மூழ்கிப்போன ஜெர்மானிய கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இவற்றுள் பெரும்பாலானவற்றுள் ஆயுதங்கள் இருப்பதாகவும், இந்த கப்பல்கள் நதியின் நீரோட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இப்படி வெளியே தெரிந்த ஜெர்மானிய கப்பலை செர்பிய அரசு வெளியேற்றும் பணியில் இறங்கியது. இதற்காக மட்டும் 30 மில்லயன் அமெரிக்க டாலர்களை அந்நாட்டு அரசு செலவழித்து குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்