தொடக்கம் முதலே கொரோனாவை 'சிறப்பாக' கையாண்டு... பாராட்டுகளை 'குவித்த' நாட்டுக்கு... 'புதிதாக' எழுந்துள்ள சிக்கலால் 'அச்சம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்தென்கொரியாவில் இரவு விடுதிகளால் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
தொடக்கம் முதலே கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டு பாராட்டுகளை குவித்து வந்த தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தென்கொரியாவில் தேசிய அளவில் முடக்கநிலையை அமல்படுத்தாமலே, அதிக கொரோனா சோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவானது.
இதையடுத்து தென்கொரிய அரசு சில கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், மீண்டும் திறக்கப்பட்ட சில இரவுநேர கேளிக்கை விடுதிகளால் தற்போது அங்கு புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பல விடுதிகளில் உறுப்பினர்கள் தவறான முகவரியை அளித்துள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதும் மிகவும் சவாலாகியுள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து அங்கு பள்ளிகள் அடுத்த வாரத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த முடிவை தற்போது அதிகாரிகள் தள்ளிவைத்துள்ளனர்.
தென்கொரியாவில் இதுவரை 10,936 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 9,670 பேர் குணமடைந்துள்ளனர். 258 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக அங்கு புதிய பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்துவந்த நிலையில் 2 நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் வெடிக்கும் என அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் எச்சரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.