"பொதுமக்கள் கிட்ட பேசுறப்போ சிரிச்சு தான் பேசணும்.. இல்லைன்னா 6 மாசம் சம்பளம் கட்".. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட மேயர்.. எங்கப்பா இருக்கு அந்த நாடு..?
முகப்பு > செய்திகள் > உலகம்பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேயர் ஒருவர், அரசு ஊழியர்கள் மக்களிடம் பேசுகையில் சிரித்த முகத்துடன் பேசவேண்டும் எனவும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். இது உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் எனச் சொல்வார்கள். மனம்விட்டு சிரிப்பது, நம்முடைய வாழ்வை ஆரோக்கியமானதாக மாற்றும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அதேபோல பிறரிடத்தில் பேசும்போது, இன்முகத்துடன் பேசுவது, உறவுகளை மேம்படுத்தும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேயர் ஒருவர் இதனை சட்டமாகவே இயற்றியுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள், பொதுமக்களிடம் சிரித்து பேசவேண்டும் எனவும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருக்கிறார்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் கியூசான் மாகாணத்தில் உள்ளது முலனாய் நகராட்சி. இதன் மேயராக இருப்பவர் அரிஸ்டாட்டில் அகுயர். இவர் சமீபத்தில் "புன்னகைக்கொள்கை" என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்படி அரசு அதிகாரிகள், மக்களுக்கு சேவை செய்யும்போது, அமைதி மற்றும் நட்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக சிரித்தபடி இன்முகத்துடன் இருக்க வேண்டும் என்று மேயர் உத்தரவிட்டிருக்கிறார் அரிஸ்டாட்டில் அகுயர்.
அபராதம்
ஒருவேளை மக்களிடம் பேசும்போது, அதிகாரிகள் சிரித்துப் பேச தவறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களிடம் இன்முகத்துடன் பேச தவறும் அரசு ஊழியர்களுக்கு 6 மாத சம்பளத்துக்கு இணையான அபராதம் விதிக்கப்படும் அல்லது பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய முலனாய் நகராட்சி மேயர் அரிஸ்டாட்டில் அகுயர்," இந்த பகுதியில் மீனவர்கள் மற்றும் தென்னை விவசாயிகள் அதிகளவில் இருக்கின்றனர். இவர்கள் கிராமங்களை விட்டு வரி செலுத்தவோ அல்லது உதவி பெறச் செல்லும்போது அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாகவே இப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
பிலிப்பைன்ஸ் மேயர் கொண்டுவந்துள்ள இந்த புன்னகை திட்டத்துக்கு உலகம் முழுவதும் பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
Also Read | திருமணத்தை மீறிய உறவில் வந்த சிக்கல்.?.. சோகத்தில் மூழ்கிய இரண்டு குடும்பங்கள்.. திருச்சியில் பரபரப்பு..!
மற்ற செய்திகள்