சந்தோஷத்துக்கு பதிலா.. வாழ்க்கையையே சோகமா மாத்திய லாட்டரி பரிசு.. தம்பதிக்கு நேர்ந்த பரபரப்பு சம்பவம்..
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக ஒருவருக்கு லாட்டரி அடித்தாலே, அவரது வாழ்வில் பெரிய அதிர்ஷ்டம் அடித்ததாக பலரும் கருதுவார்கள்.
சமீபத்தில் கூட, கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது வேட்டை விற்க இருந்த நிலையில், லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் அடித்ததால், தனது கடன்களும் தீர்ந்து, வீடும் மீட்கப்பட்ட செய்தி, அதிகம் வைரலாகி இருந்தது.
இது போல, துபாய், ஆஸ்திரேலியா, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் லாட்டரி மூலம், ஒருவரின் வாழ்வே தலை கீழாக மாறியது தொடர்பாக, நிறைய செய்திகள் சமீபத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது.
இந்நிலையில், லாட்டரி அடித்த பின்னர், மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஒரு தம்பதியின் வாழ்க்கை, அப்படியே தலை கீழாக மாறிய சம்பவம் ஒன்று, பலரையும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ என்னும் நகரை சேர்ந்தவர் Barry. இவரது மனைவி பெயர் Jenny Chuwen. இந்த தம்பதியருக்கு பல ஆண்டுகளுக்கு முன், லாட்டரியில் சுமார் 4.6 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.
இதனால், Barry மற்றும் Jenny ஆகியோர் கடும் உற்சாகத்தில் உறைந்து போயுள்ளனர். அதுவரை, முடி திருத்துபவராக இருந்து வந்த Barry, அதன் பின்னர் தனது சலூனை ஊழியருக்கு பரிசாக கொடுத்து விட்டு, சொத்து முதலீட்டாளர் மற்றும் எஸ்டேட் தொழிலில் இறங்கி உள்ளார். ஆனால், தனது தொழில் மூலம் கொடி கட்டிப் பறந்து வந்த Barry-க்கு கடந்த 2008 ஆம் ஆண்டு, கடும் அதிர்ச்சி ஒன்றும் காத்திருந்தது.
அதாவது,திடீரென அவரது தொழிலில் பின்னடைவு ஏற்படவே, சம்பாதித்த பணம் அனைத்தையும் இழந்து, நிறைய கடனுக்கும் Barry தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவரது நிறுவனங்களும் கலைக்கப்பட்ட நிலையில், தனது சொகுசு பங்களா ஒன்றையும் கடன் காரணமாக, விற்கப்படும் நிலையில் Barry தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போல, குழந்தைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தையும் Barry மற்றும் அவரது மனைவி Jenny நடத்தி வந்த நிலையில், அதில் வரும் பணம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்கள். இதன் காரணமாக, கணவன் மனைவி இருவரும் கடும் மன அழுத்தத்திற்கும் ஆளாகி உள்ளார்கள். இது ஒருபுறம் இருக்க, தனது தொழிலில் பழக்கம் ஏற்பட்ட பெண் ஒருவருடனும் Barry-க்கு உறவு ஏற்பட்டுள்ளது.
இதனால், மனைவி Jenny-ஐ பிரிந்த Barry, தற்போது அந்த பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏறக்குறைய லாட்டரி அடிப்பதற்கு முன்பிருந்த வாழ்க்கை ஒன்றிற்கே Barry திரும்பி விட்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக அவரது நண்பர் ஒருவர் கூறுகையில், லாட்டரியை வெல்வது என்பது, மகிழ்ச்சிக்கு உத்தரவாதமான ஒன்று என்றே பலரும் நினைக்கிறார்கள் என்றும், ஆனால், அதை வென்றவர்களுக்கு மட்டுமே அது எப்போதும் எளிய முன்னேற்றமாக இருக்காது என்பது தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்