"நாலு வாரமா வாடகை தரல.." சகோதரிகள் வீட்டின் கதவை திறந்ததும் வந்த துர்நாற்றம்.. ஒரு மாசமா தொடரும் 'மர்மம்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்நான்கு வாரங்களாக தங்கள் குடியிருப்பிற்கு வாடகை தராமல், சகோதரிகள் இருந்து வந்த நிலையில், வந்து விசாரித்து பார்த்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர் அஸ்ரா அப்துல்லா அல்செஹ்லி. இவரது சகோதரியின் பெயர் அமல் அப்துல்லா அல்செஹ்லி.
இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு, சகோதரிகள் இரண்டு பேரும் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் சேவை மூலமாக அகதி அந்தஸ்து கேட்டு முறையிட்டு வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், இவர்கள் வசித்து வந்த குடியிருப்பில், அவர்களுக்கான அஞ்சல் பெட்டியில் கடிதங்கள் குவிந்து கிடப்பதும், அந்த குடியிருப்பின் மேலாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல், இவர்கள் இருவரும் நான்கு வாரங்களாக குடியிருப்பிற்கு வாடகை செலுத்த தவறியுள்ளது பற்றியும் போலீசாருக்கு, புகார் ஒன்றை கடந்த மாதம் மேலாளர் அளித்துள்ளார்.
போலீசாரும் சகோதரிகள் இரண்டு பேர் வசித்து வந்த வீட்டிற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் தான், அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அஸ்ரா மற்றும் அமல் அப்துல்லா ஆகியோரின் உடல் அழுகிய நிலையில் அவர்களது வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டதால், அங்கிருந்த அனைவரும் கடுமையாக அதிர்ந்து போயினர்.
கடந்த மே மாதமே, சகோதரிகள் இருவரும் இறந்து போயிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பகாவே, இருவரின் உடலும் அவர்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பிறகும், இதுவரை இது தொடர்பாக ஒரு துப்பும் துலங்கவில்லை என்பது தான் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல, அஸ்ரா மற்றும் அமல் ஆகியோரின் உடலை மீட்டெடுத்த போது, அவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நபர்கள் நுழைந்த அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், இருவரின் உடலில் காயங்களும் இல்லை என்பதும் இந்த வழக்கில் அதிகாரிகளுக்கு மேலும் குழப்பத்தை உண்டு பண்ணி உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெரிய அளவில், அவர்கள் தொடர்பு இல்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், அதே வேளையில் சிட்னி பகுதியில், தனது வீட்டை சுற்றியுள்ள பலரிடமும் சகோதரிகள் சிரித்து பேசி பழகி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இருவரின் உடல் கண்டடுக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிய நிலையில், போலீசாரால் இதுவரை அவர்களின் மரணத்தின் காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல், தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இதனால் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு பொதுமக்கள் உதவியையும் போலீசார் நாடி வருகின்றனர்.
சவுதி அரேபியாவை சேர்ந்த சகோதரிகள், சிட்னி பகுதியில் மர்மமாக மரணமடைந்த நிலையில் இதுவரை தகவல் ஏதும் கிடைக்காமல் இருப்பது பலரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்