பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 81 கைதிகளுக்கு நேற்று மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து சவூதி அரேபிய ஊடக முகமை வெளியிட்டுள்ள செய்தியில்," தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் பல கொடூரமான குற்றங்களைச் செய்த குற்றவாளிகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுள் அல்கொய்தா மற்றும் ஹவுதி போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடக்கம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குற்றவாளிகள்
பொதுவாகவே குற்றவாளிகளின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் சவூதி அரேபியாவில் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் செய்த குற்றங்களை சவூதி அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,"பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களைக் கொன்றவர்கள், அரசாங்க பணியாளர்கள் மற்றும் முக்கிய பொருளாதார தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியவர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகளை கொன்று அவர்களின் உடல்களை ஊனப்படுத்துதல் மற்றும் போலீஸ் வாகனங்களை குறிவைத்து கண்ணிவெடிகளை புதைத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபட்டவர்கள், கடத்தல், சித்திரவதை, கற்பழிப்பு, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை சவூதிக்குள் கடத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 81 பேரில் 73 பேர் சவூதி குடிமக்கள், ஏழு பேர் ஏமன் மற்றும் ஒருவர் சிரிய நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விசாரணை
குற்றவாளிகள் அனைவரும் சவூதி நீதி மன்றத்தில் 13 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 3 முறை விசாரணை செய்யப்பட்ட பின்னரே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
மேலும், சவூதி தேசிய ஊடகம் அளித்த அறிக்கையில்,"நாட்டின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு எதிராக சவூதி அரேபியா தொடர்ந்து கண்டிப்பான மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை எடுக்கும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடைசியாக கடந்த 1980 ஆம் ஆண்டு மெக்கா மசூதியை கைப்பற்றிய 63 போராட்டக்காரர்களுக்கு சவூதி அரேபியா ஒரே நாளில் மரண தண்டனையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்