உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம்.. திடீரென வெளியான செயற்கைக்கோள் படங்கள்.. உலக நாடுகள் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் நாட்டின் அருகே ரஷ்யா குவித்துள்ள ராணுவ படைகளின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் பல வருடங்களாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லை அருகே ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
எல்லையில் படைகள் குவிப்பு
உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. ஆனாலும், ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
அமெரிக்கா ஆதரவு
இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷ்யாவுக்கு உக்ரைன் கெடு விதித்துள்ளது. இதில் பங்கேற்க ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளையும் உக்ரைன் அழைத்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுமார் 1 மணி நேரம் உரையாடினார். அப்போது அமெரிக்காவின் ஆதரவை ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கைக்கோள் படங்கள்
இந்த நிலையில் பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யாவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதைப் புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மாக்சர் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் படங்களில் எல்லைப் பகுதிகளில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
போர் பதற்றம்
கிரிமியா அருகிலுள்ள விமான நிலையத்தில் அதிகளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதும் தெரிகிறது. இந்த விமான நிலையம் அருகே 500-க்கும் மேற்பட்ட ராணுவ கூடாரங்கள் காணப்படுகிறது. எல்லையில் அமைந்துள்ள நூவூஜெர்னோய் என்ற இடத்தில் ராணுவ பயிற்சி நடவடிக்கைகளும் காணப்படுகிறது. உக்ரைனில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டஎ வரை ரஷ்யா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்