"என்னால முடியல மா, பயமா இருக்கு.." இறப்பதற்கு முன் ரஷ்ய வீரர் அனுப்பிய மெசேஜ்.. உருக வைக்கும் தாயின் நிலை
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில், ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.
நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே இருக்க, உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டு வருகிறது.
உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி, பொது மக்கள் பலரும் பதுங்கு குழியில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.
உயிரிழந்த இந்திய மாணவர்
இந்தியாவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் மக்களை, மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் பத்திரமாக தங்களின் சொந்த நாட்டிற்கு மீட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும், இந்திய மாணவர் ஒருவர் நேற்று உக்ரைனில் போருக்கு மத்தியில் உயிரிழந்திருந்தது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
ராணுவ வீரரின் மெசேஜ்
அதே போல, இந்த போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில், ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பதற்கு முன், தனது தாய்க்கு அனுப்பிய மெசேஜ் பற்றிய தகவல்கள் தற்போது பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது.
கண் கலங்க வைத்த சம்பவம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது பற்றி, விவாதிக்க வேண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு, அவசரமாக கூடியது. இந்த பொதுக்குழுவில், ஐ.நாவுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்ஸால் கலந்து கொண்டார். ரஷ்யாவின் போர் நடவடிக்கையால், உக்ரைன் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி செர்ஜி பேசினார்.
பயந்து போன தாய்
அப்போது, ரஷ்ய ராணுவ வீரர் குறித்து உருக்கமான தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டார். போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர், தனது தாய்க்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ்களின் ஸ்க்ரீன்ஷாட்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அப்போது, அதில் சம்மந்தப்பட்ட ரஷ்ய வீரரிடம், அவரின் தாய், "ஏன் நீண்டகாலமாக நீ மெசேஜ் அனுப்பவில்லை?. உனக்கு பார்சல் ஏதேனும் அனுப்பவா?" என கேட்கிறார்.
பயமாக உள்ளது
இதற்கு பதிலளித்த ராணுவ வீரர், "நான் கிரிமியாவில் இல்லை. தற்போது நான் உக்ரைனில் இருக்கிறேன். இங்கு உண்மையான போர் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு பயமாக உள்ளது. நாங்கள் அனைத்து நகரங்களிலும் வெடிகுண்டு வீசி வருகிறோம். பொது மக்கள் இருக்கும் பகுதிகளில் கூட, குண்டு வைத்து தகர்த்து வருகிறோம். உக்ரைன் மக்கள் எங்களை வரவேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
போரில் பலி
ஆனால், அவர்கள் எங்களின் வாகனங்களின் கீழ் விழுந்து எங்களை தடுத்து நிறுத்துகிறார்கள். பாசிஸ்ட்டுகள் என்றும் எங்களை அழைக்கிறார்கள். இது மிகவும் கடினமாக உள்ளது அம்மா. இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என அந்த ராணுவ வீரர் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதன் பிறகு, அந்த இளம் ராணுவ வீரர், போரில் உயிரிழக்கவும் செய்துள்ளார். தன்னிடம் கடைசியாக பேசிய மகனின் நிலையை எண்ணி, நிச்சயம் அந்த தாய் அழுது புலம்பி இருப்பார்.
இது போன்று, பல ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள், தங்கள் வாழ்வினை போரில் இழந்து வருவதால், உடனடியாக இதற்கான தீர்வு காணும் நடவடிக்கையில், உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்