பிரம்மாண்ட கட்டிடத்தின் நடுவே ராக்கெட்டை ஏவிய ரஷ்ய ராணுவம்.. பில்டிங் எப்படி ஆகிருச்சுன்னு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனில் உள்ள அரசு கட்டிடத்தில் ரஷ்ய ராணுவம் ராக்கெட்டுகளை ஏவியிருக்கிறது. இதனால் அந்த கட்டிடத்தில் பிரம்மாண்ட துளை ஒன்று உருவாகியுள்ளது.
போர்
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டில் சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை நடத்த அனுமதி கோரி ரஷ்ய பாராளுமன்றத்தில் அதிபர் புதின் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பாராளுமன்றமும் அனுமதி கொடுத்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின்.
இதனை அடுத்து உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் காரணமாக இதுவரையில் 30 லட்சம் மக்கள் அண்டை தேசங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உக்ரைன் கூறிவருகிறது.
ராக்கெட் தாக்குதல்
இந்நிலையில் இன்று தெற்கு உக்ரேனிய துறைமுக நகரமான மைகோலாய்வில் உள்ள அரசு நிர்வாக கட்டிடத்தை ரஷ்ய ராக்கெட் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 3 பேர் பலியானதாகவும் 22 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்ளூர் கவர்னர் விட்டலி கிம் சேதமடைந்த கட்டிடத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், கட்டிடத்தின் நடுவே பிரம்மாண்ட துளை ஒன்று இருப்பது தெளிவாக தெரிகிறது.
மீட்புப் பணி
இந்த தாக்குதலால் சேதமடைந்த கட்டிடத்தில் இருந்து இதுவரையில் 18 பேர்களை மீட்டுள்ளதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருவதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய உள்ளூர் கவர்னர் விட்டலி கிம்," ரஷ்ய ராணுவம் கட்டிடத்தின் பாதியை அழித்துவிட்டது. அதன் பிறகு அவர்கள் என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைந்தனர்" என்றார்.
தீவிரமடையும் தாக்குதல்
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கிவ் மற்றும் மரியு போல் ஆகிய நகரங்களில் இருநாட்டு ராணுவ படைகளுக்கிடையே கடுமையான யுத்தம் நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்