இருட்டுல தெரியாம சுட்டுட்டோம்.. ‘மன்னிசிடுங்க’.. தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட ‘ஹெலிகாப்டர்’.. பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இருட்டில் ரஷ்ய நாட்டு ஹெலிகாப்டரை தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டதாக அசர்பைஜான் நாடு மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகோர்னா-காராபாக் எனும் மலைப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அசர்பைஜான் மற்றும் ஆர்மீனிய நாடுகள் பல ஆண்டுகளாக போரிட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று சண்டை நடைபெற்று வரும் பகுதியில் பறந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த எம்.ஐ 24 ரக ஹெலிகாப்டரை அசர்பைஜான் நாட்டு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதில் இரண்டு ரஷ்ய நாட்டு வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘நேற்று மனிதர்கள் கையில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணையால் எம்.ஐ 24 ரக ஹெலிகாப்டர் மாலையில் சுட்டு வீழ்த்தப்பட்டு ஆர்மீனிய நாட்டு எல்லையில் விழுந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து அசர்பைஜான் நாடு தவறுதலாக ஹெலிகாப்டரை சுட்டுவிட்டோம் என ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக அசர்பைஜான் நாடு அளித்த விளக்கத்தில், சண்டை நடைபெற்று வரும் பகுதியில் இருட்டான நேரத்தில் குறைந்த உயரத்தில் ரஷ்ய ஹெலிகாப்டர் பறந்துள்ளது. ரஷ்ய விமானப்படை ஹெலிகாப்டர்கள் இதற்கு முன் இந்த பகுதியில் பறந்ததில்லை. ஆர்மீனிய நாட்டின் ஆத்திரமூட்டும் செயல் காரணமாக நாங்கள் எதற்கும் தயார் நிலையில் இருந்தோம். அதனால்தான் தவறுதலாக ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த துயர சம்பவத்துக்கு ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது தற்செயலான நிகழ்வுதானே தவிர ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையாக கருத வேண்டாம்’ என விளக்கமளித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அசர்பைஜான் நாடு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்