'தொட்டுத்தான் பாருங்களேன்'.. 50,000 பேர் உயிரோடு இருக்க மாட்டாங்க.. ரஷ்யாவுக்கு அமெரிக்கா நேரடி வார்னிங்
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா சுமார் 1,00,000 படையினரை நிறுத்தியது. நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளது. படையினரை நிலைநிறுத்தியது தொடர்பாக இதுவரை ரஷ்யா போதிய விளக்கமளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது அமெரிக்கா. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எச்சரிக்கை விடுக்கும் விதமாக உக்ரைன் எல்லைப்பகுதியில் ராணுவத்தை நிறுத்தியுள்ளது ரஷ்யா. ரஷ்யாவின் இந்த செயலுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவை கடுமையாக எச்சரித்து வருகிறது.
பிரச்னையின் தோற்றம்
1990 வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது. உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.
மேலும், கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளை வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு கொடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சி போராக அமைந்தது. பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
2015ல் மின்ஸ்க் ஒப்பந்தம்
2015ஆம் ஆண்டு உக்ரைனின் அப்போதைய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ - ரஷ்யாவின் விளாதிமிர் புதின் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தான் மின்ஸ்க் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு 20க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின.
உலக நாடுகள்
ரஷ்யாவை பொறுத்தவரை உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் வருவது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்கிறது. மேற்கத்திய நாடுகளோ, உக்ரைன் முழுவதுமாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என குறிப்பிடுகின்றன. எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா, உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளன.
ஜேக் சல்லிவன்,
இந்த நிலையில், ரஷ்யாவின் செயல்கள் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், "தற்போதுள்ள சூழலில் உக்ரைனை ரஷ்யா கைப்பற்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் அதிக அளவிலான மனித உயிரிழப்புகளும் ஏற்படும். ஆனால், எங்களின் படை மற்றும் பதிலடி மூலம், ரஷ்யாவிற்கும் அதிகப்படியான ராணுவ இழப்பு ஏற்படும் என்று நம்புகிறோம். உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் 50 ஆயிரம் உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்படும்" என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்