நாங்க 'சாதிச்சிட்டோம்'...கொரோனாவுக்கு எதிரான 'தடுப்பு' மருந்து... மனிதர்கள் மீது 'சோதனை' நடத்தி வெற்றி பெற்ற 'முதல்' நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் வெற்றி பெற்று இருப்பதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதையும் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றன. நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது.
மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா,ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்று விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறிவதில் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் Translational Medicine and Biotechnology இயக்குனர் வாடிம் தாராசோவ், ''செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்று விட்டது,'' என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ஜூன் மாதம் 18-ம் தேதி இந்த சோதனைகள் தொடங்கப்பட்டதாகவும், இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்து முதல் குழுவினர் வருகின்ற புதனன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அடுத்த குழுவினர் வருகின்ற 20-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள Gamalei Institute of Epidemiology and Microbiology நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற 'முதல் நாடு' என்ற பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது. எனினும் இந்த தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்