'ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்-5...' உண்மையாகவே கண்டு பிடிச்சிட்டாங்களா...? - விஞ்ஞானிகள் எழுப்பும் சந்தேகங்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸிற்கு ஒரு வழியாக ரஷ்யா முதன் முதலில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், அதை தன் இரு மகள்களுக்கு செலுத்தி நல்ல முன்னேற்றம் உள்ளதாக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் நேற்று (12.08.2020) தெரிவித்திருந்தார். இந்த தடுப்பூசி மருந்திற்கு ஸ்புட்னிக்-5 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த ஸ்புட்னிக்-5 மருந்தின் 3-ஆம் கட்ட மனித அடிப்படையிலான பரிசோதனைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றே கூற வேண்டும். அதனால் இன்று சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோருக்கு இன்று (22-08-2020) இறுதிகட்ட சோதனையை தொடங்கவுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஸ்புட்னிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தடுப்பு மருந்து உற்பத்தியினை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஸ்புட்னிக்-5 மருந்தின் பாதுகாப்பு தன்மை குறித்து விரிவாக ஆய்வு நடத்த வேண்டியிருப்பதாக விஞ்ஞானிகளும், உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளன.
ரஷ்ய அதிபர் நேற்று தங்கள் நாடு கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி பற்றி அறிவித்ததும், பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் அதனை உற்பத்தி செய்யவும் போட்டிபோட்டு வருகின்றனர்.
இந்தியாவும் வி.கே.பால் தலைமையிலான குழுவை அமைத்து ரஷ்யா உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்து குறித்து முடிவெடுப்பதற்காக மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று டெல்லியில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். அப்போது, கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவது, கொண்டு வருவது மற்றும் மக்களுக்கு செலுத்துவது ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், ரஷ்யா அறிவித்துள்ள தடுப்பு மருந்து குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவும் பிற நாடுகளில் சர்வதேச அளவிலான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான நேரடி முதலீட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதன் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை இந்தியா, பிலிப்பைன்ஸ், யூஏஇ, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் செயல்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.
ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரியேவ் கூறும் போது, இந்த கொரோனா தடுப்பு மருந்தை வாங்க இந்தியா, பிலிப்பைன்ஸ், யூஏஇ, சவூதி அரேபியா, இந்தோனேஷியா உள்ளிட்ட 20 நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறது. 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் 3 கோடி மருந்துகள் உள்பட உலகம் முழுவதும் 20 கோடி மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
ரஷ்யாவை தாண்டி மேலும் 5 நாடுகளில் ஆண்டுதோறும் 50 கோடி பேருக்கான மருந்துகளை தயாரிக்க ரஷ்யா தயாராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்