'யோவ், என்ன மனுஷன் யா நீ'... 'தட்டுத்தடுமாறி ஆரம்பித்த ஹோட்டலில் திருடிய கொள்ளையர்கள்'... 'ஆனா இப்படி ஒரு தண்டனையா'?... ஜொலித்த நம்ம ஊரு இளைஞர்!
முகப்பு > செய்திகள் > உலகம்அன்பே சிவம் படத்தில் வரும் 'அந்த மனசு தான் சார் கடவுள்' என்ற வாக்கியத்திற்கு மிகவும் பொருத்தமாக மாறியுள்ளார் இந்த இளைஞர்.
கனடாவில் வசித்து வருபவர் மிதுன் மேத்யூ. கேரளாவைச் சேர்ந்த இவர், தான் கஷ்டப்பட்டுப் பார்த்த வேலையால் கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேமித்து ஒரு ட்ரக் ஒன்றை வாங்கினார். அதைத் தனது நீண்ட நாள் கனவான ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பதை நனவாக்க அந்த ட்ரக்கை உணவகமாக மாற்றினார். இந்நிலையில் ஒரு நாள் இரவு சிலர் மேத்யூவின் ட்ரக் அருகே கூடியிருந்தனர். அப்போது அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சென்று விட்டார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவர் கண்ட காட்சி அவரை நொறுங்க செய்தது. அவர் உணவகமாக மாற்றிய அந்த ட்ரக்கில் இருந்த எரிவாயு சிலிண்டர், மற்றும் உணவகத்திற்குத் தேவையான முக்கியமான பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்தது. பிப்ரவரியில் தனது ஹோட்டல் தொழிலை மேத்யூ ஆரம்பித்த நேரத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்.
பின்னர் கொரோனா முடிந்து தனது தொழிலை ஆரம்பிக்கலாம் என இருக்கும் நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் யாராக இருந்தாலும் கோபத்தின் உச்சத்திற்குத் தான் செல்வார்கள். ஆனால் மிதுன் மேத்யூ அவ்வாறு நடந்து கொள்ளாமல், தனக்குக் கஷ்டம் இருந்தபோதும் உணவில்லாமல் கஷ்டப்படுவோருக்கு உணவு வழங்க ஆரம்பித்தார். முதலில் படிக்கும் மாணவர்கள் சிலர், சரியாகச் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்கள்.
அவர்களுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்த மிதுன் மேத்யூ, பின்னர் குறைந்த வருமானம் உடைய மக்கள், பின்னர் வீடில்லாத மக்கள் எனத் தனது சேவையைத் தொடர்ந்து கொண்டே சென்றார் மேத்யூ. தனக்கு நடந்த சம்பவம் குறித்து விவரித்த மேத்யூ, அந்த கொள்ளையர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை. அவர்களுக்குச் சாப்பாடு இல்லாத காரணத்தினால் தானே திருடி இருப்பார்கள். உணவு கிடைத்தால் நிச்சயம் திருடமாட்டார்கள் அல்லவா.
யாருக்குத் தெரியும் அவர்களே நாளைக்கு நல்ல நிலைக்கு வரலாம். அப்படி வந்த பின்னர் அவர்கள் எனது கடைக்கு வாடிக்கையாளர்களாக வரலாம் எனக் கூறும் மிதுன் மேத்யூ, எனக்குச் சாப்பாடு போட்ட நாட்டிற்கு நான் எதையாவது திரும்பிக் கொடுக்க வேண்டும். அதனால் இதைச் செய்கிறேன் என எளிமையாக முடித்துக் கொண்டார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து இணையத்தில் பலருக்கும் தெரிய வந்த நிலையில், மேத்யூவை பலரும் பாராட்டி வரும் நிலையில், கொள்ளையர்களுக்கு இது தான் சரியான தண்டனை, அவர்களின் மனது நிச்சயம் வலிக்கும். மேத்யூ மன்னிப்பு என்ற ஒற்றை சொல்லால் அவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுத்து விட்டார். நிச்சயம் அந்த கொள்ளையர்கள் மேத்யூவிடம் திரும்பி வந்து மன்னிப்பு கேட்பார்கள் எனக் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அதேநேரத்தில் தனது உணவகத்தில் நடந்த கொள்ளை குறித்துப் பேசும்போது கோபமோ, கஷ்டப்படுவோருக்குச் சாப்பாடு கொடுப்பதைக் குறித்து எந்த வித பெருமையையோ அவரது குரலில் காணமுடியவில்லை. இதனால் தான் 'அந்த மனசு தான் சார் கடவுள்'.
மற்ற செய்திகள்