"உடல் உறுப்புகள் இயங்கவில்லை.. மீட்கமுடியாத தூரத்திற்கு சென்றுவிட்டார்".. பாக். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்-ன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், உடல் உறுப்புகள் இயங்கவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
பர்வேஸ் முஷாரஃப்
1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரஃப். 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது முஷாரஃப் குடும்பம். ராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், 1998ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் ஆட்சியின் போது ராணுவ தளபதி ஆனார். பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்து, நாட்டின் தலைமை பொறுப்பை கைப்பற்றினார்.
அதன் பின்னர் அரசியல் வாழ்வில் சறுக்கல்கள், அமெரிக்கா உடனான உறவில் ஏற்பட்ட சிக்கல் என வீழ்ச்சியை சந்திக்க துவங்கிய முஷாரஃப், 2001 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தானின் அதிபராக இருந்தார். அவரது கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார் முஷாரஃப். அதன்பிறகு மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர் தேர்தலில் தோற்றதால், துபாய்க்கு திரும்பினார்.
உச்சபட்ச தண்டனை
பாகிஸ்தானில் 2007 ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக, செயல்பட்டதாக இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவருக்கு உட்சபட்ச தண்டனையை அளித்தது. ஆனால், துபாயில் வசித்துவந்த முஷாரஃப்பிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முஷாரஃப். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மீட்க முடியாத நிலை
முஷாரஃப் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அவர் வெண்டிலெட்டரில் இல்லை. அவருடைய உடல் உறுப்புகள் சரிவர இயங்கவில்லை. கடந்த 3 வாரங்களாக அவரது நோயின் (அமிலாய்டோசிஸ்) சிக்கலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்க முடியாத நிலைக்கு அவரது உடல் சென்றிருக்கிறது. அவர் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்