‘பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு... சீக்கிரம் நல்ல செய்தி வரும்..!’ ஆப்கான் மக்களை நிம்மதி பெருமூச்சு விட வச்ச நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வேகமாக வெளியேற தொடங்கினர். இதனால் ஆப்கானில் உள்ள காபூல் சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவியத் தொடங்கினர்.
அப்போது ஐஎஸ் கோரோசான் அமைப்பு காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 100-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது. இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரிக்க படைகள் முழுவதும் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது.
இதனை அடுத்து காபூல் விமான நிலையத்தை தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இது ஆப்கானை விட்டு வெளியேறிவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தானின் நிம்ரூஸ் பாலைவனம் வழியாக வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே காபூல் விமான நிலையத்தை நிர்வகிக்க துருக்கி நாட்டிடம் தாலிபான்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்நாட்டு அதிபர் இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த சூழலில் காபூல் விமான நிலையம் மீண்டும் திறப்பது தொடர்பாக கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் அல் தானி, ‘காபூல் விமான நிலையத்தை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்னும் சில நாட்களில் நல்ல செய்தியை கேட்பீர்கள்’ என அவர் தெரிவித்துள்ளார். இது ஆப்கானை விட்டு வெளியேற உள்ள மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மற்ற செய்திகள்