நடுவானில் விமானி வெளியிட்ட தகவல்.. உடனே கண்கலங்கிய பெண்.. கைதட்டி உற்சாகப்படுத்திய பயணிகள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்மார்பக புற்றுநோயில் இருந்து குணமாகிய பெண் பயணிக்கு விமானி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹவாய்
பெரும் சிக்கலை சந்திக்கும் போது, இதில் இருந்து வெளியேறிய பின்னர் ஆசுவாசப்படுத்திக்கொள்ள எங்கேயாவது நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என பலருக்கும் தோன்றும். அப்படித்தான் ஜிர்ல் ஓல்ட்ஹாம் என்னும் பெண்மணிக்கும் இருந்திருக்கிறது. மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானவுடன், துணிச்சலாக அதற்கான சிகிச்சைக்கு அவர் சம்மதித்திருக்கிறார். மருத்துவர்களின் உதவியோடு அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக அவர் மார்பக புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்திருக்கிறார். பின்னர் இதனை கொண்டாட ஹவாய் தீவுகளுக்கு பயணிக்கவும் ஜிர்ல் ஓல்ட்ஹாம் முடிவெடுத்திருக்கிறார்.
பயணம்
சவுத் வெஸ்ட் விமானம் மூலமாக ஹவாய் செல்ல தீர்மானித்த ஜிர்ல் ஓல்ட்ஹாம், தனது தோழிகளுடன் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நடுவானில் ஹவாய் நோக்கி விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில், விமானி அங்கிருக்கும் மைக்கில் பேச அனைத்து பயணிகளும் அதை ஆர்வத்துடன் கேட்க துவங்கினர். ஆனால், விமானி தன்னை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது ஜிர்ல் ஓல்ட்ஹாம்க்கு சற்று நேரம் கழித்துத்தான் தெரியவந்திருக்கிறது.
விமானி பேசுகையில்,"நம்முடைய பயணிகளில் சிறப்பு விருந்தினர் ஒருவர் இருக்கிறார். மார்பக புற்றுநோயை எதிர்த்து வெற்றிபெற்றதை கொண்டாட ஹவாய் செல்கிறார் அவர்" என்றார். இதை கேட்ட ஜிர்ல் கண்கலங்குவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த விமானி,"துணிச்சலுடன் போராடி புற்றுநோயை வெற்றிகொண்டிருக்கிறார் ஜிர்ல். அவருக்கு வாழ்த்துக்கள்" என்றார். இதை கேட்ட சக பயணிகள் கைதட்டி ஜிர்ல்-ஐ உற்சாகப்படுத்தினர். இதனால் நெகிழ்ந்துபோன ஜிர்ல், தனது முகத்தை மூடிக்கொண்டு தனது கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.
வீடியோ
இந்த வீடியோவை வலேரி ஜோன்ஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், அதில்,"சவுத் வெஸ்ட் விமான நிறுவனத்திற்கு நன்றி. இந்த செயலை எப்போதும் நாங்கள் நினைவில் வைத்திருப்போம்" என வலேரி ஜோன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். மேலும், மார்பக புற்றுநோயை வெற்றிகொண்ட ஜிர்ல்-க்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்