‘ஓகே சொன்னதும்’... ‘அடுத்த சில மணிநேரங்களில்’... ‘தடுப்பூசி விநியோகிக்கப்படும்’...‘ரெடியான தடுப்பு மருந்து நிறுவனம்’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற்ற சில மணி நேரத்தில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து, இறுதிக்கட்ட பகுப்பாய்வு தரவுகளின்படி 95 சதவீதம் திறன் வாய்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை சுமார் 43,000 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஃபைசர் வேக்சின் போடப்பட்ட நபர்களில் 8 பேருக்கு மட்டுமே கொரோனா வந்துள்ளது.
இதனால் ஃபைசர் நிறுவனத்தின் மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மருந்திற்கு அவசர ஒப்புதல் வாங்குவதற்கு ஃபைசர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் கிறிஸ்மஸ் தினத்திற்குள் இந்த மருந்துக்கு ஒப்புதல் பெற அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் ஃபைசர் நிறுவனம் அளிக்க உள்ளது.
இந்நிலையில், ஃபைசர் தடுப்பூசி மருந்து நிறுவன அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கூறுகையில், ‘அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற்ற சில மணி நேரத்தில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘ஃபைசர் தடுப்பூசி கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் தினமே எனது வாழ்க்கையின் மிக அற்புதமான நாள் என்றும்’ குறிப்பிட்டுள்ளார்.
‘எங்கள் தடுப்பு மருந்து அனைத்து தரப்பினருக்குமானது. வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதாகவும், தீவிர பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை’ என்று மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், ஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பு மருந்து மைனஸ் 70 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். மேலை நாடுகளில் குளிர் நிலவுவதால் அங்கு இவற்றை பாதுகாப்பது மிக எளிது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் காலநிலை அளவு அதிகமாகவே உள்ளது. அதனால், கிராமங்களில் இந்த மருந்துகளை கொண்டு செல்வது மிகவும் கடினமான விஷயம்.
போலியோ வேக்சின் போல அவ்வளவு எளிதாக இதை ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஃபைசர் வேக்சின் அமலுக்கு வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தற்போது ஃபைசர் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
மற்ற செய்திகள்