"குலோப்ஜாமூன்-லாம் எடுத்துட்டு போக கூடாது".. பயணியிடம் கறார் காட்டிய ஏர்போர்ட் அதிகாரிகள்.. சட்டுன்னு பயணி செஞ்ச காரியம்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்விமான நிலைய அதிகாரிகளுக்கு பயணி ஒருவர் குலோப் ஜாமூன்களை வழங்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பரிசோதனை
பொதுவாக விமான நிலையங்களில் பயணிகளை பரிசோதிப்பதை சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறார்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள். காரணம், தங்கம், போதை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தும் கும்பல்கள் அதிக அளவில் பிடிபடுவதை முன்னிட்டு கடத்தல்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் அதிகாரிகள். இதற்காக அதிநவீன இயந்திரங்களையும் உலகம் முழுவதிலும் உள்ள விமான நிலையங்கள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், தாய்லாந்து விமான நிலையத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
குலோப்ஜாமூன்
தாய்லாந்து நாட்டின் புக்கெட் விமான நிலையத்திற்கு வந்த ஒருவரை அங்கிருந்த அதிகாரிகள் பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது அவருடைய உடைமையில் குலோப்ஜாமூன் இருப்பதை அதிகாரிகள் பார்த்திருக்கின்றனர். அதனை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர், அடுத்த கணமே அவற்றை அங்கிருந்த அதிகாரிகளுக்கு சாப்பிட கொடுத்திருக்கிறார். இதனால் ஆச்சர்யம் அடைந்த அதிகாரிகள் தயங்க, டப்பாவில் அடைக்கப்பட்ட குலோப்ஜாமூன்களை எடுத்துக்கொள்ளும்படி அதிகாரிகளை அந்த பயணி வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, அதிகாரிகளும் மகிழ்ச்சியுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட குலோப்ஜாமூன்களை உண்டு மகிழ்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மகிழ்ச்சி
இந்த வீடியோவை Himanshu Devgn என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,"புக்கெட் விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையில் குலாப் ஜாமூன்களை எடுத்துச் செல்ல அவர்கள் எங்களை தடுத்தபோது, எங்கள் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். இந்த வீடியோ பலரையும் நெகிழ செய்திருக்கிறது. இந்த வீடியோ இதுவரையில் 1 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. விமான நிலைய அதிகாரிகளுக்கு குலோப்ஜாமூன்களை அளிக்கும் பயணியின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்