'மீண்டும் பிறந்த சார்லி சாப்ளின்'... 'துரத்திய மன அழுத்தம்'... 'சோகத்தை வெல்ல தன்னையே கோமாளியாக்கிய இளைஞர்'... நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சொல்வார்கள். அப்படி, தன்னுடைய எதார்த்தம் மற்றும் கோமாளித்தனமான நடிப்புகளால் பலரை சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், பாகிஸ்தானில் மீண்டும் வலம் வந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

'மீண்டும் பிறந்த சார்லி சாப்ளின்'... 'துரத்திய மன அழுத்தம்'... 'சோகத்தை வெல்ல தன்னையே கோமாளியாக்கிய இளைஞர்'... நெகிழ்ச்சி சம்பவம்!

வறுமையில் பிறந்து, தாய் தந்தையர் ஆதரவு இழந்து 5 வயதிலேயே நிற்கதியான ஒரு சிறுவன், தாய் ஏறிய நாடக மேடையில் தானும் ஏறி, உலகமே புகழும் உச்சிக்கு சென்றான். அந்த சிறுவன் தான் சார்லி சாப்ளின்.

சார்லி சாப்ளினின் எதார்த்தமான, அமைதியான நகைச்சுவை நடிப்பு பலரது கவலைகளை மறக்கச் செய்தது.

நகைச்சுவை நடிப்பால் இவ்வுலகை சிரிக்க வைத்த கலைஞன் மறைந்தாலும், அவனது புகழ் இறவா வரம் பெற்றது.

அதே யதார்த்த நடிப்பை மீண்டும் வெளிப்படுத்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த பொம்மை விற்கும் தொழிலாளி ஒருவர்.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆட்டோ, கார், பைக்குகளுக்கு இடையே கையில் ஒரு கோலுடன் காட்சியளிக்கும் இளைஞர் தான், அந்த 28 வயதான உஸ்மான் கான்.

சாலையோரம் குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகளை விற்பனை செய்யும் உஸ்மான் கான், கொரோனா ஊரடங்கில் சார்லி சாப்ளினாக மாறியுள்ளார்.

அமைதியான முறையில் உஸ்மான் கான் செய்யும் நகைச்சுவையை பார்க்க, அவரைச்சுற்றி எப்போதும் குழந்தைகள் சுற்றி வருகிறார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகினர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் உஸ்மான் கானும் ஒருவர்.

இந்நிலையில், நோய் தொற்றால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட சார்லி சாப்ளினின் வீடியோக்களை பார்த்துள்ளார்.

அப்போது, பிறரின் சிரிப்புக்காக தன்னை கோமாளியாக மாற்றிக் கொண்ட சார்லி சாப்ளினால் ஈர்க்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, சார்லி சாப்ளினைப் போலவே உடை அணிந்து, நகைச்சுவை வெளிப்படுத்தி மற்றவர்களின் முகத்தில் சிரிப்பை உணர வேண்டும் என்று உஸ்மான் கான் முடிவெடுத்தார்.

அவ்வப்போது சாலைகளிலும், கடைகளுக்கும் சென்று குறும்புத்தனமான நகைச்சுவையை வெளிப்படுத்தும் உஸ்மான் கானை, அப்பகுதி மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இதையடுத்து, அவருடைய குறும்புத்தனமான சேட்டை வீடியோக்கள் இணையத்தில் வைரலாகவே, இரண்டே மாதங்களில் டிக்டாக்கில் 8 லட்சம் பேர் அவரை பின் தொடர்ந்தனர்.

சார்லி சாப்ளினை போன்று வறுமையான வாழ்வை ஆரம்பமாக கொண்ட உஸ்மான் கான், நகைச்சுவை நடிப்பு மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்படுகிறார்.

தனது நடிப்பிற்கு எந்தவித பலனையும் எதிர்பாராத உஸ்மான் கான், அமைதியான நகைச்சுவை மூலம் மக்களின் மனதை வெல்வது கடினம் என்று கூறியுள்ளார்.

மேலும், திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்