வரலாறு காணாத பேய்மழை.. "3 ல ஒருபங்கு நிலம் தண்ணில இருக்கு".. பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ந்துபோன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் இந்திய பிரதமர் மோடி மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கனமழை
அண்டை தேசமான பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு பருவழமை பெய்துவருகிறது. இதன் காரணமாக மூன்றில் ஒருபங்கு நிலம் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. கனமழை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆயிரத்தை கடந்திருக்கின்றன. நாட்டின் முக்கியமான பகுதிகள் அனைத்திலும் நீர் நிறைந்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர், ஐக்கிய நாடுகள் அவை தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை பற்றி பேசிய அந்நாட்டின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான்,"அதீத கனமழையின் காரணமாக நாட்டில் கற்பனை செய்ய முடியாத அளவு நெருக்கடி உருவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து 1,136 பேர் வெள்ளத்தினால் உயிரிழந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் 7 ல் ஒரு பாகிஸ்தான் குடிமகன் வெள்ளத்தினால் கடுமையான சேதத்தை சந்தித்திருக்கிறார்" என்றார்.
கோரிக்கை
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மற்றும் மேற்கு பலுசிஸ்தான் மாகாணங்களில் உள்ள விவசாய நிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் நீர் சூழ்ந்து நிற்கிறது. வெள்ளைப்பருக்கு காரணமாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. அனைத்து இடங்களிலும் தண்ணீர் நிற்பதால் அதனை எங்கே திருப்பி விடுவது என்ற குழப்பத்தில் அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில், காலநிலை மாற்றத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நாடுகள் தங்களது கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் ரெஹ்மான் கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவேண்டும் எனவும் ரெஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட அழிவை பார்த்து வருத்தமடைந்தேன். இந்த இயற்கைப் பேரிடரால் உயிரிழந்தவர்கள் அனைவர்க்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இயல்புநிலை விரைவில் திரும்பும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்