மீண்டும் அதிர்ச்சி.. காரில் சிக்கி 500 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட உணவு டெலிவரி ஊழியர்.. பதைபதைப்பு சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்சமீபத்தில் , டெல்லியில் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது கார் ஒன்று மோதி இருந்தது. இதில் காருக்கு அடியில் சிக்கிய இளம்பெண், சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்து போக, இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் தற்போது ஏறக்குறைய அதே போல் ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறி பலரையும் பதைபதைப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
நொய்டாவில் ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் கௌஷல். இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரவில் உணவு டெலிவரி செய்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அந்த சமயத்தில், நொய்டா செக்டார் 14 பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்றின் அருகே கௌஷல் சென்று கொண்டிருந்த போது அவர் பைக் மீது கார் ஒன்று மோதியதாக சொல்லப்படுகிறது.
இந்த விபத்தில் கீழே தடுமாறி விழுந்த கௌஷல், காருக்கு அடியில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது தெரியாமல் கார் ஓட்டுநர் சுமார் 500 மீட்டர் தூரம் வரை கௌஷலை இழுத்து கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ஒரு கோவில் அருகே காரை நிறுத்தி விட்டு கௌஷலின் உடல் வெளியே வந்த பிறகு கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது கௌஷலின் சகோதரர் அவருக்கு அழைக்க அங்கிருந்தவர்கள் போன் எடுத்து விவரத்தை தெரிவித்துள்னர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கௌஷல் இறந்ததை உறுதி செய்த பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இளம் டெலிவரி ஊழியர் ஒருவர், காரில் சிக்கி 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம், பலரையும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
மற்ற செய்திகள்