'ஒரே பிரசவத்தில் 3 பிஞ்சுகள்'... 'சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த அப்பா'... 'நொடியில் இடியாய் வந்த செய்தி'... உலகம் கொடுத்த கொடூர தண்டனை!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறக்கிறது என்றால் அது அந்த பெற்றோருக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பெரும் மகிழ்ச்சியையும், அளவற்ற ஆனந்தத்தையும் கொடுக்கும். அவ்வாறு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த நிலையில், அந்த சந்தோசத்தைக் கொஞ்சம் கூட அனுபவிக்க முடியாத நிலைக்கு இந்த உலகம் மாறியுள்ளது தான் சோகத்தின் உச்சம்.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது என்ற செய்தியைக் கேட்டதும், குழந்தையின் தந்தை மகிழ்ச்சியில் என்ன செய்வது எனத் தெரியாமல், மருத்துவமனையிலேயே உற்சாகமாக நடனமாடினார்.
ஆனால் அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை. சிறிது நேரத்திலேயே இடியாய் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. இதுவரை உலகில் எங்கும் இப்படி நடந்ததாகத் தகவல் இல்லை, 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த தந்தை அதிர்ச்சியில் கதறி அழுதார். அவரை மருத்துவர்கள் தேற்றிய நிலையில், இது எப்படி சாத்தியம் என மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
மெக்சிகோவில் 1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று இருக்கிறது, 22 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இந்த தகவலே மெக்சிகோ மக்களை அதிர்ச்சியின் கோரா பிடியில் வைத்துள்ள நிலையில், ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது புரியாத புதிராக இருக்கிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அதே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுவது இல்லை. எனவே இது எப்படி சாத்தியம் என மருத்துவர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ஒருவேளை கொரோனா தொற்று உடையவர்கள் அந்த குழந்தையைப் பார்க்க வந்து, அதன் மூலம் பரவி இருக்குமோ என யோசித்தாலும் அதற்கும் வாய்ப்பு இல்லை.
இதனிடையே ஒரே பிரசவத்தில் பிறந்தது 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை ஆகும். ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உடல்நிலை சற்று தேறி வரும் நிலையில், மற்றொரு ஆண் குழந்தைக்குச் சுவாச பிரச்சினையால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குழந்தைகள் தாயின் கருப்பையில் இருந்தபோது, கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா வைரஸ் பரவி இருக்க முடியுமா என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அந்தக் குழந்தைகளுடைய தாய், தந்தைக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை. ஒருவேளை அவர்கள் அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்களா என்று கண்டறியப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. முன்னதாக அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள்தான், முதன்முதலாகப் பிறந்த குழந்தைக்குத் தாயின் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா தொற்று பரவியதைக் கண்டறிந்தார்கள். அதே நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்படாது எனவும் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
3 குழந்தைகள் பிறந்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா என்பது நம்ப முடியாத அதிசயமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், உலகத்தைக் காண ஆசையோடு வந்த அந்த 3 குழந்தைகளுக்கு இந்த உலகம் இப்படி ஒரு கொடூர தண்டனையைக் கொடுக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது மெக்சிகோ முழுவதும் அந்த 3 குழந்தைகளுக்காக பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. மனிதக் குலத்தின் பிரார்த்தனை நிச்சயம் வெல்லும் என நம்புவோம்.
மற்ற செய்திகள்