'சிகரெட்டுக்கு குட்பை'... 'புகையிலை இல்லாத நாடாக மாற திட்டம்'... அதிரடி திட்டங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்புற்றுநோயால் இறக்கும் நால்வரில் ஒருவர் புகையிலையால் உயிரிழக்கிறார்.
2025-ஆம் ஆண்டுக்குள் புகையிலை, சிகரெட் பயன்பாடு இல்லாத நாடாக நியூசிலாந்தை உருவாக்க, அந்நாட்டு அரசு செயல் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்களின் மூலமாக சட்டப்பூர்வமான புகைபிடிக்கும் வயது படிப்படியாக அதிகரிக்கப்படும். குறிப்பாக 2004-க்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை வரை நீட்டிக்கப்படலாம். அந்த தலைமுறைக்குப் புகைபிடிப்பது சட்டவிரோதமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே புகையிலை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிகோடினின் அளவைக் கணிசமாகக் குறைத்தல், வடிப்பான்களைத் தடை செய்தல், புகையிலைக்குக் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்தல், புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விற்கக்கூடிய இடங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டம் குறித்து பேசிய நியூசிலாந்தின் இணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால், ''ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,500 நியூசிலாந்து மக்கள் புகையிலையால் இறக்கின்றனர், 2025 ஆம் ஆண்டுக்குள் புகையிலை இல்லாத நாடாக நியூசிலாந்தை மாற்ற விரைவான செயல்திட்டத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு நமக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை'' எனத் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து மக்களிடையே புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இந்நாட்டில் புற்றுநோயால் இறக்கும் நால்வரில் ஒருவர் புகையிலையால் உயிரிழக்கிறார். எனவே அதனைக் கட்டுப்படுத்தும் திட்டங்களைப் பல பொதுச் சுகாதார அமைப்புகள் வரவேற்றுள்ளன.
மற்ற செய்திகள்