எலி பிடிக்கும் வேலைக்கு ₹1.38 கோடி சம்பளம்.. அறிவிப்பை பார்த்துட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள்.. எங்கப்பா இது?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் எலி பிடிக்கும் வேலைக்கு புதிய அதிகாரியை பணியமர்த்த இருப்பதாக மேயர் அறிவித்திருக்கிறார். இதற்கு அளிக்கப்பட இருக்கும் ஊதியம் தான் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பொதுவாகவே எலிகள் வீட்டு உரிமையாளர்களுக்கு மிகுந்த தலைவலி கொடுக்கும் உயிரினமாகவே பார்க்கப்படுகிறது. வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதுடன், சில நேரங்களில் விபத்துகளுக்கு இவை காரணமாக அமைவது உண்டு. அந்த வகையில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். இங்கே உள்ள சுரங்க பாதைகளில் சுமார் 20 லட்சம் எலிகள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்நகரில் எலிகளின் எண்ணிக்கை அதிக அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது குறித்து நகரின் சேவை மையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 67 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியான வீட்டு வசதி கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் நியூயார்க் நகரத்தில் எலிகளின் தொல்லைகளை குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் நியூயார்க் நகர மேயர் அலுவலகம் இதற்காக புதிய அதிகாரியை நியமிக்க இருக்கிறது. Director of Rodent Mitigation (எலிகளின் தாக்கத்தை தணிக்கும் இயக்குநர்) என்ற பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்க இருப்பதாக நியூயார்க் மேயர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்தில் உள்ள எலிகளின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் நகரத்தை தூய்மையானதாக மாற்றுதல் ஆகியவற்றை மையமாக கொண்டு பணியாற்ற வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்காக ஆண்டுக்கு 1,70,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி ரூபாய்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில்,"எலிகள் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை வெறுக்கும். ஆனால், 88 லட்சம் நியூயார்க் நகர வாசிகள் மற்றும் நகர அரசாங்கம் ஆகியவை எலிகளின் எண்ணிக்கையை குறைத்தல், நகரில் தூய்மையை அதிகரித்தல், மற்றும் கொள்ளைநோய்கள் பரவலைத் தடுத்தல் ஆகிய பணிகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்றுவர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும்படியும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்