"பண்றத எல்லாம் பண்ணிட்டு முழிக்குறத பாரு.." போன் விளையாடி ஒன்னர லட்சத்துக்கு செலவு இழுத்து விட்டுட்டானே.. நொந்து போன பெற்றோர்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்நியூ ஜெர்சி : தாயின் மொபைல் போனில் விளையாடிய 2 வயது சிறுவன், தனது குடும்பத்தினருக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு இழுத்து விட்டுள்ளான்.
கொரோனா தொற்றிற்கு முந்தைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலம் அத்தியாவசிய பொருட்களை ஆர்டர் செய்யும் வழக்கம் ஓரளவுக்கு இருந்து வந்தது.
ஆனால், கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க, கடைகளும் மூடப்பட்டது. இதன் காரணமாக, ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் மோகமும் மக்களிடையே அதிகரித்தது.
ஆன்லைனில் ஆர்டர்
ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான பொருட்களை பொறுமையாக பார்த்து, நமது பட்ஜெட்டிற்கேற்ற வகையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வெளியே சுற்றித் திரிந்து பல கடைகள் ஏறி இறங்க வேண்டாம் என்பதால், இந்த ஆன்லைன் ஆர்டர் மோகம், மக்களிடையே தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் அதிர்ச்சி
இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் பிரமோத் குமார் என்பவரின் வீட்டில், அடுத்தடுத்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டதாக பெரிய பெரிய பாக்ஸ்களில் பொருட்கள் வந்து இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரமோத் குமார் மற்றும் அவரது மனைவி மது ஆகியோர், ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், அவர்கள் இருவரும் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை.
நினைத்து பார்க்காத காரியம்
மேலும், அவர்களின் முதல் இரண்டு குழந்தைகளும் எதையும் ஆர்டர் செய்யவில்லை. தவறாக பொருட்கள் வந்து விட்டது என கருதிய நிலையில், அவர்கள் அனைவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு காரியம் நடந்துள்ளது தெரிய வந்தது.
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதில் ஆர்வமுள்ள மனைவி மது, சில பர்னிச்சர் பொருட்களை விஷ் லிஸ்டில் போட்டு வைத்துள்ளார். சமயம் கிடைக்கும் போது, ஆர்டர் செய்து கொள்ளலாம் என்பதற்காக அவர் அப்படி செய்துள்ளார்.
தெரியாம நடந்துருச்சு
ஆனால், அவரின் இரண்டு வயது கூட ஆகாத மூன்றாவது மகன் அயான்ஸ் குமார், தாயின் மொபைல் போனில் விளையாடிய போது, தவறுதலாக பர்னிச்சர் பொருட்களை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. சுமார் 2,000 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 1.5 லட்சம் ரூபாய்) பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதால், சிறுவனின் பெற்றோர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
கவனமாக இருக்கணும்
இந்த் சம்பவம் பற்றி சிறுவனின் தந்தை பிரமோத் குமார் பேசுகையில், 'அயான்ஸ் இதனை செய்ததை நம்பவே முடியவில்லை. ஆனால், உண்மையாக அது தான் நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் மொபைல் போனில் கடுமையான பாஸ்வேர்டு மற்றும் ஃபேஸ் லாக் பயன்படுத்த வேண்டும் என்பதை தான் இந்த சம்பவம் எங்களுக்கு உரைத்துள்ளது' என தெரிவித்தார்.
சிரிப்பு தான் வந்தது
மேலும் அவரது மனைவி மது குமார், 'எனது இரண்டு வயது மகன் தான் இந்த பொருட்களை எல்லாம் ஆர்டர் செய்தான் என்பதை அறிந்ததும் முதலில் சிரிப்பு தான் வந்தது' என்றார். கடந்த ஒரு வாரங்களாக, பார்சலுக்கு மேல் பார்சல்கள், பிரமோத் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், வால்மார்ட் ஆன்லைன் நிறுவனத்திடம் இது பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் கவனம்
அதன் பிறகு, மகன் அயான்ஸ் ஆர்டர் செய்த சில பொருட்களை வைத்துக் கொள்ள எண்ணிய பிரமோத் மற்றும் மது, மீதமுள்ள சில பொருட்களை திரும்ப ஆன்லைன் நிறுவனத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தங்களுடைய சிறு வயது குழந்தைகள், மொபைல் போனை எடுத்து நோண்டும் போது, தவறுதலாக இப்படி நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.
மற்ற செய்திகள்