நிலவில் உருவான 92 அடி பள்ளம்.. "இப்படி நடக்க சான்ஸே இல்லை" என குழம்பும் ஆராய்ச்சியாளர்கள்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நிலவில் இரண்டு பள்ளங்கள் உருவாகி இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா அறிவித்துள்ளது. மர்ம ராக்கெட் மோதி இந்த பள்ளங்கள் உருவாக்கி இருக்கலாம் என நாசா தெரிவித்திருக்கிறது.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி, மர்ம ராக்கெட்டின் பாகங்கள் மோதியதில் அருகருகே இரண்டு பள்ளங்கள் உருவாகி இருப்பதாக நாசா கூறியுள்ளது. அத்துடன் அந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது நாசா. 2009 ஆம் ஆண்டு முதல் சந்திரனைச் சுற்றி வரும் நாசாவின் லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் இந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறது. ராக்கெட்டின் பாகங்கள் மோதியதில் கிழக்குப் பகுதியில் உருவான பள்ளம் 9 அடி (18 மீட்டர்) அகலமும், மேற்குப் பகுதியில் உருவான பள்ளம் 52.5 அடி (16 மீட்டர்) அகலமும் இருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது. ஒன்றின் அருகே மற்றொரு பள்ளம் இருப்பதால் மொத்தமாக 91.8 அடி (28 மீட்டர்) அகலத்திற்கு இந்த பள்ளம் காட்சியளிப்பதாக நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆச்சர்யம்
நிலவினை நோக்கி பயணிக்கும் ராக்கெட் ஒன்றினை நாசா ஏற்கனவே கண்காணித்து வந்திருக்கிறது. இருப்பினும் இந்த இரட்டை பள்ளங்கள் ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்திருக்கிறது. ஏனென்றால் ராக்கெட்டின் முன்பகுதி எப்போதும் அதிக எடை கொண்டவையாக இருக்கும். அது மோதும்போது இத்தகைய பள்ளங்கள் ஏற்படுவதை ஏற்கனவே பலமுறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அதேவேளையில் ராக்கெட்டின் ஏனைய பாகங்கள் அதன் முன் பகுதியை ஒப்பிடுகையில் மிகவும் எடை குறைவானதாகவே இருக்கும். இந்நிலையில், ஒரு ராக்கெட் மோதி எப்படி இரண்டு பள்ளம் உருவாகியிருக்கும்? என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் குழப்பத்திற்கு காரணம்.
யாருடைய ராக்கெட்?
கடந்த 2015 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு ராக்கெட் ஒன்றை ஏவியிருந்தது. இந்த ராக்கெட் நிலவில் மோதலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதினர். ஆனால், நிலவில் தற்போது பள்ளம் உருவானது சீனாவால் நிலவு ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட Chang’E 5-T1 ன் காரணமாகத்தான் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நாசா இதுபற்றி இதுவரையில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
அப்படி இருந்தாலும், நிலவில் மோதியது Chang’E 5-T1 என்ற ஒரு ராக்கெட் மட்டுமே. ஆகவே, எப்படி இரண்டு பள்ளங்கள் உருவாகின? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்