பூமிக்கு அருகில் வரவிருக்கும் சிறுகோள் - பாதை கொஞ்சம் மாறினா.. அவ்வளவுதான் நாசாவின் பகீர் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக கோள்கள், விண் கற்கள், சிறு கோள்கள் ஆகியவை சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறு சூரிய மண்டலத்தில் சுழலும் விண் கற்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். நாள்தோறும் இப்படி பல்லாயிரம் விண்கற்கள் பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழையும். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள காற்று அடர்த்தியின் காரணமாக அவை எளிதில் தீப்பிடித்து பூமியின் பரப்பை தொடுவதற்கு முன்னரே சாம்பலாகிவிடும்.
அதிலும் தப்பிக்கும் விண்கற்கள் பூமியின் பெரும்பான்மையான பரப்பு கடல் நீரால் சூழப்பட்டுள்ளதால் அதிலே விழுந்துவிடும். ஆனால், மிகப்பெரிய கற்கள் அல்லது சிறுகோள்கள் பூமிக்கு மிக மோசமான ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. பனியுகம் முடிவிற்கு வந்தது இப்படியான சிறுகோள் ஒன்று பூமியில் மோதியதே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
புதிய சிறுகோள்
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தைவிட இரண்டரை மடங்கு பெரிதான சிறுகோள் ஒன்று வரும் ஜனவரி 18, 2022 ஆம் தேதி, பூமியை கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. வழக்கமாக 150 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் பூமியை நெருங்கினாலும், நாசா அதை அபாயகரமான சிறுகோள் என்று வகைப்படுத்தும். மேலும், அக்கோளினை தீவிரமாக கண்காணிக்கும்.
இந்நிலையில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி பூமியைக் கடக்க இருக்கும் (7482) 1994 PC1 என்னும் சிறுகோள் 3,280 அடி அளவுடையது என்பதுதான் இப்போது அச்சம் தரக்கூடிய தகவலாக இருக்கிறது.
சிறுகோளின் பாதை
EarthSky எனப்படும் விண்வெளி ஆய்வு அமைப்பின் கூற்றுப்படி இந்த சிறுகோள் ஜனவரி 18, 2022 அன்று மாலை 4:51 மணிக்கு EST (21:51 UTC) அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 19 காலை 3.21 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் பூமியுடன் ஒப்பிடும் போது மணிக்கு 43,754 மைல்கள் (வினாடிக்கு 19.56 கிலோமீட்டர்) வேகத்தில் நகர்ந்துவருவதாவும் பூமியிலிருந்து 1.2 மில்லியன் மைல்கள் தூரத்தில் இந்த சிறுகோள் பூமியை கடந்துசெல்ல இருக்கிறது.
இதனால் ஆபத்து இல்லை என்றாலும் இந்த சிறுகோளின் பாதை சிறிது மாறினாலும் பூமிக்கு இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது நாசா.
கடந்த ஆகஸ்ட் 9, 1994 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் ஆய்வகத்தில் (Siding Spring Observatory) பணிபுரியும் ராபர்ட் மெக்நாட் என்பவரால் இந்த சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறுகோள் தவிர்த்து, மேலும், 5 சிறுகோள்கள் பூமியை நோக்கி வரவுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்