‘காசு இல்லப்பா…நாட்ட கட்டிக்காப்பாத்தும் அளவு காசு இல்ல'- அண்டை நாட்டு பிரதமர் ‘ஓப்பன் டாக்’..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடும் நிதி நெருக்கடி இருப்பதால் பாகிஸ்தானைக் கட்டிக்காப்பாற்றும் அளவு அரசிடம் பணம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அறிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான்.
வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன் அதிகம் இருப்பதாகவும், குறைவான வரி வசூல் எனப் பல காரணங்களால் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசம் ஆக உள்ளது எனத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இந்த நிதி நிலை நெருக்கடி ‘ஒரு தேசிய பாதுகாப்பு’ பிரச்னை ஆக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் மக்களுக்கு ஏற்ற நலவாழ்வு உதவிகளை செய்ய முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது.
இம்ரான் கான் மேலும் கூறுகையில், “நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையே நம்மிடம் போதிய பணம் இல்லாதது தான். இதனால் தான் வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்க வேண்டியதாக உள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் விலை அதிகரிப்பதாகக் கூறலாம். ஆனால், நாம் பெட்ரோல் விலையை உயர்த்தியே ஆக வேண்டும்.
இல்லையென்றால், நமது கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அண்டை நாடுகள் உடன் ஒப்பிட வேண்டும் என்றால், பாகிஸ்தான் கரென்ஸி மதிப்பில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 250 ரூபாய் (பாகிஸ்தான் மதிப்பில்), வங்கதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாய் (பாகிஸ்தான் மதிப்பில்) என விற்கிறது. நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 138 ரூபாய் என விற்கிறோம். ஆக, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மலிவு” எனப் பேசியுள்ளார். (ஒரு பாகிஸ்தான் ரூபாய் என்பது இந்திய மதிப்பில் 44 இந்திய பைசாக்கள் ஆகும்).
மேலும் இம்ரான் கான் கூறுகையில், “காலனிய ஆட்சிக் காலத்தின் பாதிப்பு இன்றும் நம்மிடம் இருக்கிறது. வரி கட்டுவதைத் தவிர்க்கும் பழக்கம் காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. உள்ளூரிலேயே உற்பத்தி செய்யத் தவறியது நம் நாட்டின் நிதி நெருக்கடிக்கு காரணம் ஆகிவிட்டது” என்றும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்