"அமெரிக்காவின் Most Wanted கடத்தல் மன்னன்.. பிடிச்சுக் கொடுத்தா 2 கோடி டாலர் பரிசு".. பல வருஷ தேடலுக்கு முற்றுப்புள்ளி வச்ச மோப்பநாய்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த மெக்சிக்கோவை சேர்ந்த ரஃபேல் காரோ குயின்டெரோ கைது செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் மெக்சிக்கோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவது குறித்து, அமெரிக்க அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவந்த நிலையில், முக்கிய கடத்தல் கும்பல்களை பிடிக்கவும் கோடிக்கணக்கில் பணத்தினை வரி இறைத்துவருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்த ரஃபேல் காரோ குயின்டெராவை மெக்சிக்கோ கடற்படையினர் கைது செய்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டாப் 10
FBI கடந்த 2018 ஆம் ஆண்டு உலகின் தேடப்பட்டும் குற்றவாளிகளின் டாப் 10 பட்டியலை வெளியிட்டது. அதில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரஃபேல் காரோ குயின்டெரோ-வும் ஒருவராவார். கடந்த 1984 ஆம் ஆண்டு மெக்சிகோவில் 2500 ஏக்கர் பரப்பளவில் போதை பொருட்களை இவர் உருவாக்கி வந்திருக்கிறார். அப்போது, மெக்சிக்கோ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த அமெரிக்காவை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு ஏஜெண்டை கொலை செய்திருக்கிறார் ரஃபேல் காரோ குயின்டெரோ.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மெக்சிக்கோவின் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.
கைது உத்தரவு
இதனை தொடர்ந்து, ரஃபேல் காரோ குயின்டெரோ-வை மீண்டும் கைது செய்ய இருப்பதாக மெக்சிக்கோ அரசு அறிவித்திருந்தது. அதன்பின்னர் ஏராளமான தேடுதல் வேட்டைகளை அந்நாட்டு அரசு நடத்திவந்தாலும், ரஃபேலை அவர்களால் பிடிக்கவே முடியவில்லை. இந்நிலையில், தான் அவரை உலகின் டாப் 10 தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது அமெரிக்கா. மேலும், அவரை பிடித்துக் கொடுத்தால் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.
அதிரடி
இந்நிலையில், மெக்சிக்கோவின் சினாலோவா மாகாணத்தில் ரஃபேல் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து, ராணுவ ஹெலிகாப்டரில் சினாலோவோ பகுதிக்கு சென்ற வீரர்கள் மோப்பநாய் மேக்ஸ்-ன் உதவியுடன் ரஃபேலை பிடித்திருக்கிறார்கள். முன்னதாக, சினாலோவோ பகுதிக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததில் 14 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ரஃபேலை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். பல ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் மெக்சிக்கோ அரசால் தேடப்பட்டுவந்த ரஃபேல் கைது செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்