ஒரு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்ததற்கு 89 ஆண்டுகள் சிறையா? இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்; அப்படி என்னதான் நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > உலகம்இன்னும் இரண்டே நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுக்கக் கொண்டாடப்பட உள்ளது. மேற்கத்திய நாடுகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் கிறிஸ்துமஸும் ஒன்று. இதனால் பல இடங்களில் வீடுகளில் கூடாரம் அமைப்பதும், வீட்டுக்கு வெளியே கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரிப்பதும் களைகட்டியுள்ளது.
இதில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது என்பது தனி கலை. அதில் என்ன மாதிரியான ஜொலிக்கும் பொருட்களை எல்லாம் தொங்க விடலாம், எப்படியான பளிச்சிடும் பொருட்களை எல்லாம் தோரணம் கட்டலாம் என்று யோசித்துச் செய்வதே இந்த பண்டிகைக் கொண்டாட்டத்தின் முக்கியமான விஷயங்களில் ஒன்று.
அப்படி இங்கிலாந்தைச் சேர்ந்த போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் தனது வீட்டு கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க முடிவு செய்தார். அதன்படி தன் வீட்டுக்குள் வைக்கப்பட்ட மரத்தில் பல போதை மருந்து பாக்கெட்டுகளையும், இங்கிலாந்து ராணி படம் பொறித்த 20 டாலர் நோட்டுகளையும் அலங்காரப் பொருட்களாக தொங்க விட்டுள்ளார்.
வெறுமனே வீட்டுக்குள் இப்படியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் கூட அந்த போதை மருந்து ஆசாமிக்குப் பெரிய பிரச்சனைகள் வந்திருக்காது. ஆனால் மார்வின் பொர்செல்லி என்னும் போதை பொருள் கடத்தும் அந்த ஆசாமி, ‘ஸ்பெஷல்’ கிறிஸ்துமஸ் மரத்தை போட்டோ எடுத்து தன் மொபைல் போனில் சேமித்து வைத்துள்ளார்.
இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த போலீஸ் மார்வினை மடக்கிப் பிடித்து விசாரித்து அவரது போனை சோதனை செய்துள்ளனர். அப்போது தான் இந்த திடுக்கிடும் படத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.
அந்தப் படம் சிக்கியதைத் தொடர்ந்து அதில் சம்பந்தமுடைய மேலும் 8 நபர்களை லிவர்பூல் போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் அந்த விசேஷ கிறிஸ்துமஸ் மரத்தையும் அதனுடன் இருந்த போதைப் பொருள் பொட்டலங்களையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 1.3 மில்லியன் பவுண்டுகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கிடுக்குப்பிடி விசாரணை மற்றும் சோதனைகள் மூலம் 3 லட்சம் பவுண்ட் ரொக்கம், துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவத்தில் போதிய ஆதாரங்கள் கிடைத்த காரணத்தால் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் சேர்த்து 89 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்