ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. பார்க்கிங் லைன்-அ விட்டு 3 இஞ்ச் தள்ளி நின்ன கார்.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் அதிர்ந்துபோன உரிமையாளர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் பார்க்கிங் லைனை விட்டு வெறும் 3 அங்குலம் தள்ளி நின்ற காருக்கு அபராதம் விதித்திருக்கின்றனர் அதிகாரிகள். இதனை எதிர்த்து புகாரும் செய்திருக்கிறார் காரின் உரிமையாளரான முதியவர்.
பார்க்கிங்
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள Swansea நகருக்கு சமீபத்தில் சென்றிருக்கிறார் ஜூலியன் கிரிஃபித்ஸ் எனும் 59 வயது நபர். தன்னுடைய மகனுக்கு பொருட்கள் வாங்குவதற்காக அங்கிருந்த கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார் ஜூலியன் கிரிஃபித்ஸ். அப்போது, தன்னுடைய காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியிருக்கிறார் இவர். பிற வாகனங்களுக்கு இடையூறு அளிக்காத வகையில் தனது வாகனத்தை ஜூலியன் கிரிஃபித்ஸ் நிறுத்தியிருந்த போதிலும் அவருக்கு 100 யூரோ அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து கடிதம் ஒன்றும் ஜூலியன் கிரிஃபித்ஸ்-க்கு வந்திருக்கிறது. மேலும், தான் எவ்விதமான விதிமீறலிலும் ஈடுபடவில்லை எனவும், ஆகவே இதனை எதிர்த்து புகார் அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் அவர்.
அபராதம்
இதுபற்றி பேசிய ஜூலியன் கிரிஃபித்ஸ்,"அன்றைய தினம் என்னுடைய மகனுக்கு சில பொருட்கள் வாங்குவதற்காக Swansea வில் உள்ள கடைக்கு சென்றிருந்தேன். பார்க்கிங் பகுதி கூட்டமாக இருந்த நிலையிலும், என்னுடைய காரை பத்திரமாகவும் அதே சமயத்தில் பிற வாகனங்கள் சென்றுவர இடையூறு இல்லாத வகையிலும் நிறுத்தியிருந்தேன். ஆனால், 3 அங்குலம் பார்க்கிங் லைனை விட்டு என்னுடைய கார் தள்ளி நிறுத்தப்பட்டதாக எனக்கு 100 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. பார்க்கிங் கண்காணிப்பு நிறுவனங்களின் அஜாக்கிரதையான போக்கையே இது காட்டுகிறது" என்றார்.
புகார்
மேலும், "சாலையை மறித்து வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால் அபராதம் விதிக்கலாம், ஆனால் 3 அங்குலத்துக்கு அபராதம் விதிப்பது முட்டாள்தனமானது" எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜூலியன். இதுதொடர்பாக வெளியான புகைப்படத்திலும், அவருடைய சிவப்பு நிற கார் பார்க்கிங் லைனுக்குள் தான் இருக்கிறது. ஆனால், பார்க்கிங் கண்காணிப்பு நிறுவனம், காரின் பின்பக்கம் லைனுக்கு 3 அங்குலம் தள்ளி இருப்பதாகவும் அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனவும் கூறி அபராதம் விதித்திருக்கிறது.
இந்நிலையில், இந்த அபாராத தொகையை எதிர்த்து புகார் அளிக்க இருப்பதாகவும் ஜூலியன் அறிவித்திருக்கிறார். இந்நிலையில், இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்