VIDEO: 'கண்ணான கண்ணே... என் தோள் மீது சாய வா!'.. மகன் துபாயில்... அம்மா மலேசியாவில்... தவமாய் தவமிருந்து... மகனை மீட்டு எடுத்த... தாயின் பாசப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மலேசிய தாயாருடன் 9 வயது மகனை சேர்த்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் துபாய் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

VIDEO: 'கண்ணான கண்ணே... என் தோள் மீது சாய வா!'.. மகன் துபாயில்... அம்மா மலேசியாவில்... தவமாய் தவமிருந்து... மகனை மீட்டு எடுத்த... தாயின் பாசப் போராட்டம்!

மலேசிய நாட்டை பூர்வீகமாக கொண்டு வசித்து வருபவர் ரோஸ் ஹு (வயது 38). தனது 45 வயதுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதில் கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றதால் அவரது கணவர் 9 வயது மகனை தன்னுடன் துபாய் அழைத்து வந்து விட்டார்.

அந்த நேரத்தில் அவருக்கு துபாயில் பயணத்தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரால் மீண்டும் மலேசியா செல்ல முடியவில்லை. தனது மகனுடன் ரோசின் கணவர் துபாயிலேயே வசித்து வந்தார்.

துபாய் நீதிமன்றத்தில் தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ரோஸ் ஹு வழக்கு தொடர்ந்தார். முதலில் கீழ்நிலை நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் மேல்முறையீடு செய்தார். அதில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி மகனை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவரால் துபாய் வர முடியவில்லை. மகனை பிரிந்து இருக்க முடியாமல் தன்னிடம் அவனை ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஜூலை 8-ந் தேதி விசிட் விசாவில் துபாய்க்கு ரோஸ் வந்தார்.

தொடர்ந்து விசாவை புதுப்பித்து மகனுடன் மலேசியா செல்ல காத்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பை வைத்து வழக்கறிஞர்கள் உதவியுடன் போலீசாரிடம் தன் மகனை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், நேற்று காலை துபாய் போலீசாரிடம் இருந்து மகனை அழைத்து செல்லும்படி தொலைபேசி மூலம் ரோசுக்கு அழைப்பு வந்தது.

போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவர் 2 ஆண்டுகள் பிரிந்து இருந்த மகனை சந்தித்தார். அப்போது கண்ணீருடன் கட்டியணைத்தது பார்ப்பவர்களை நெகிழச்செய்தது.

தந்தையிடம் இருந்த சிறுவனின் பாஸ்போர்ட் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணீர் மல்க மகனை அழைத்து சென்ற ரோஸ் போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்