மலேசியாவில் கோரத் தாண்டவம் ஆடும் 'சிவகங்கை கிளஸ்டர்'!.. அதிதீவிரமாக பரவும் கொடிய வகை கொரோனா வைரஸ் என அறிவிப்பு!.. பகீர் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பிப்ரவரி மாதம் முதலே சிறப்பாகச் செயல்பட்ட நாடு, மலேசியா. இதுவரை மலேசியாவில் 9,063 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 125 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஜூலை இறுதி வரை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்த மலேசியாவுக்குத் தலைவலியாக மாறியுள்ளார், சிவகங்கையிலிருந்து சென்ற ஹோட்டல் உரிமையாளர். கொரோனா வைரஸின் மாறுபட்ட, அதிதீவிர திரிபாகக் கருதப்படும் 'ஜெனோம் 614' எனும் கோவிட் வைரஸ் சிவகங்கைக்காரர் மூலம் அதிக வீரியத்துடன், அதிவேகத்தில் மலேசியாவில் பரவிவருவதால் திகைத்து நிற்கிறது மலேசியா.

மலேசியாவில் கோரத் தாண்டவம் ஆடும் 'சிவகங்கை கிளஸ்டர்'!.. அதிதீவிரமாக பரவும் கொடிய வகை கொரோனா வைரஸ் என அறிவிப்பு!.. பகீர் பின்னணி!

மலேசியாவின், கெடா பகுதியில் உணவகம் வைத்துள்ள ஹரி என்பவர் சிவகங்கையிலிருந்து ஜூலை 23-ம் தேதி கோலாலம்பூருக்குச் சென்றுள்ளார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தாக்கம் கண்டறியப்படவில்லை. இரண்டு வாரங்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனும் மலேசிய அரசின் எச்சரிக்கையைக் காற்றில் பறக்கவிட்ட சிவகங்கைக்காரர், ஓரிரு நாளில் தனது பணிகளைச் செய்யத் தொடங்கினார். ஜூலை 28-ம் தேதி மீண்டும் பரிசோதனை செய்தபோது அவருக்குக் கொரோனா நோய் தாக்குதல் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், இடைப்பட்ட ஒரு சில நாள்களில் அவர் பணிபுரிந்த உணவகத்தில் மட்டும் நான்கு பேருக்கு அவரிடமிருந்து பரவிவிட்டது கொரோனா. அதுமட்டுமின்றி, கடைகளுக்கு வந்துசேரும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து, அவர்கள் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 2 வயது குழந்தை உள்பட நான்கு பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குறுகிய காலத்தில் சிவகங்கைக்காரரிடம் தொடர்பிலிருந்து 313 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 20 பேருக்கும் அதிகமாக தொற்று பரவியுள்ளது. சிவகங்கைக்காரர் மூலம் தீயாய் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு 'சிவகங்கை க்ளஸ்டர்' என்றே பெயர் வைத்துவிட்டது மலேசிய அரசு. ஏனெனில், சிவகங்கைக்காரர் மூலம் இதுவரை மலேசியாவில் இல்லாத வேகத்தில் பரவிவருகிறது கொரோனா.

சிவகங்கைக்காரரின் உணவகத்துக்கு அருகே ஐந்து பள்ளிகள் உள்ளதால் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது, மலேசிய அரசு. இந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. ஐந்து பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் 28 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கைக்காரருடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பிலிருந்த ஏழாயிரம் பேருக்கு கோவிட் - 19 பரிசோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கெடாவிலிருந்து பெர்லிஸ், பினாங்கு ஆகிய மாநிலங்களுக்கும் 'சிவகங்கா தொற்று' பரவியுள்ளதாக அறிவித்துள்ளது மலேசியா.

மலேசியாவில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக் குழுக்களை விடவும் 'சிவகங்கை' தொற்று மூலம் தான் குறுகிய காலத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை கொரோனா பரவலை 'சூப்பர் ஸ்ப்ரெட்டர்' என்று அறிவித்துள்ளனர். மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் நூர் ஹிஷாம், "சிவகங்கைக்காரரிடமிருந்து பரவும் கொரோனா வைரஸ் 'ஜெனோம் 614' வகையைச் சேர்ந்தது. இது அதிக வீரியத்துடனும், அதிதீவிரமாகவும் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வகை வைரஸ் எகிப்து, பாகிஸ்தானில் கண்டறிந்துள்ளனர். இப்போது, சிவகங்கையிலிருந்து மலேசியாவுக்குப் பரவியுள்ளது. நாட்டில் கண்டறியப்பட்ட இதர கொரோனா தொற்றுக் குழுக்களைவிட 'சிவகங்கா' தொற்றுக்குழு மூலம்தான் குறுகிய காலத்தில் அதிகமானோருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்