'மாஸ்க் போட்டுட்டு ஜாகிங் போறது டேஞ்சர்...' 'சீனாவில் அப்படி ஒருத்தர் ஓடி, அவருக்கு...' டாக்டர்கள் ஆலோசனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இளைஞர் ஒருவர் முகக்கவசம் அணிந்து கொண்டு 6 கி.மீ ஓடியதால் நுரையீரல் பாதிப்படைந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் முதலில் பரவ தொடங்கிய சீனாவில் தற்போது கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளதால் சீனாவின் பல இடங்களில் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் வெளியே வரும் நபர்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் வலியுறுத்தி உள்ளது அரசு. ஆனாலும் முகக்கவசத்தை பல மணி நேரம் அணிந்திருப்பதும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறார்கள்.
இந்நிலையில் சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சாங் பிங் கடந்த ஒரு வாரமாக முகக்கவசம் அணிந்து 6 கி.மீ வரை ஜாகிங் சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன் சாங் பிங்க்கு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலியும் ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிங்கை பரிசோதித்து பார்த்ததில் அவரது இடது நுரையீரலில் துளை உண்டாகியிருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து சாங் பிங் தற்போது உயிர் பிழைத்துள்ளார்.
சீன இளைஞருக்கு ஏற்பட்ட இந்த நுரையீரல் கோளாறு குறித்து அந்நாட்டு மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 'முகக்கவசம் அணிந்தபடி தினமும் ஜாகிங் சென்றதால் நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இருந்ததால் கடும் அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்ததால் இறுதியில் நுரையீரல் செயல்பாட்டையே பாதித்துவிட்டது. மேலும் கடுமையான உடற்பயிற்சியின் போது முகக்கவசத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்' என வலியுறுத்தி உள்ளனர்.