‘லாக் டவுனில் மட்டுமே நேரத்தை செலவு பண்ணாதீங்க’... ‘உலக நாடுகள் இந்த 6 விஷயங்களையும் சேர்த்து செய்யுங்க’... எச்சரிக்கும் WHO இயக்குநர்-ஜெனரல்!
முகப்பு > செய்திகள் > உலகம்பொது மக்களின் நம்பர் 1 எதிரியான கொரோனா வைரஸை முற்றிலும் அழிக்க வெறும் லாக் டவுனில் மட்டும் நேரத்தை செலவழிப்பதை நிறுத்திவிட்டு, 6 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. ஆனால், ஊரடங்கு அறிவித்தால் மட்டும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உலக நாடுகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கண்டிப்பாக, ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் இருக்காது. இது சுகாதாரத் துறையின் அழுத்தத்தை குறைக்கும். இத்தகைய சூழலில் ஊரடங்கு அறிவித்ததுடன் மட்டும் நிற்காமல், கொரோனா பாதித்தவரை தனிமைப்படுத்துவது, அறிகுறி தென்பட்டதுமே பரிசோதனை செய்வது, சிகிச்சை அளிப்பது, கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவது போன்றவற்றில் தீவிரம் செலுத்த வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஒவ்வொரு நாடுகளும் பின்பற்ற வேண்டிய 6 விஷயங்களை அவர் கூறியுள்ளார்.
‘1. சுகாதாரத் துறையை அதிகரித்து சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
2. கொரோனா வைரஸ் பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.
3. தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்யும் வசதியை அதிகளவில் உருவாக்க வேண்டும்.
4. பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் பரவியிருக்கக் கூடும் என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை.
5. ஒவ்வொரு சமூகத்திலும், பகுதியிலும் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் அமைப்பை உருவாக்க வேண்டும்.
6. கொரோனா ஒழிப்பில் உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறிய அவர், ஆகவே லாக் டவுன் காலக்கட்டத்தை கொரோனோவைத் தாக்கி அழிக்க வேண்டிய காலகட்டமாக மாற்றவேண்டும் என்று அறிவுறுத்தி எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதையேதான் சில நாட்களுக்கு முன்னர், உலக சுகாதார நிறுவனத்தின் எமர்ஜென்சி நிபுணர் மைக்கேல் ரியானும் கூறியிருந்தார்.