‘பல்வேறு யூகங்களுக்கு மத்தியில்’... ‘40 ஆண்டுகள் புறக்கணிப்பிற்குப் பின் வெளிவரும்’... ‘வடகொரியா அதிபரின் சித்தப்பா பெயர்’... ‘என்ன காரணம்?’
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் உடல்நலம் குறித்து நிலவும் பல்வேறு யூகங்களுக்கு இடையில், அந்நாட்டின் அடுத்த தலைவராக அவரது நெருங்கிய உறவினரான கிம் பியாங் இல்-ன் பெயர் அடிபடத் துவங்கி உள்ளது.
36 வயதான வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், கடந்த 11-ம் தேதிக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில், அதுவும் வடகொரிய நிறுவனரும், கிம் ஜோங் உன்னின் தாத்தாவுமான கிம் இல்-சங்கின் பிறந்த நாள் நிகழ்ச்சி உள்ளிட்ட எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வலம் வருகின்றன. அவர் நலமாக உள்ளரா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதில் பல்வேறு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. மிக முக்கியமாக அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் அதிக முனைப்புடன் உள்ளன.
இந்நிலையில் ஒருவேளை அதிபர் கிம் ஜோங் உன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நாட்டின் அடுத்த தலைவர் யார் என்பது கேள்வி எழுந்த நிலையில், முதலில் கிம் ஜோங் உன்னின் 31 வயதான தங்கை கிம் யோ ஜாங் வர வாய்ப்பிருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், வடகொரியா நாடு பழமைவாதத்தை கடைப்பிடிக்கும் என்பதால் இதுவரை அங்கு பெண் தலைவரை அந்த நாடு சந்தித்ததே இல்லை. இந்த நிலையில், கிம் ஜோங் உன்னின் தந்தையின் சகோதரரான (மாற்றந்தாய் மகன்) கிம் பியோங் இல் (65), கடந்த 1970-ல் தனது அம்மாவின் விருப்பத்தின் பேரில் பதவிக்கு வர முயன்றார்.
ஆனால் அப்போது கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல்-லின் செல்வாக்கு காரணமாக, அது முடியாமல் போனது. பின், 40 ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளில் வட கொரியாவின் தூதராக பணியாற்றி வந்த அவர், கடந்த ஆண்டுதான் வடகொரியா திரும்பினார். தற்போது வீட்டுக் காவலில் இருப்பதாகக் கூறப்படும் இவர், பல ஆண்டுகள் புறக்கணிப்புக்கு ஆளானாலும், வட கொரிய அதிகாரப் பதவிகளில் ரத்த உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்தும் இருப்பதால் கிம் ஜாங் உன்னின் சித்தப்பாவான கிம் பியாங் இல் தலைவராக வர வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
ஏனெனில், வடகொரிய நிறுவனரான கிம் இல்-சங்கின் நேரடி ரத்த கடைசி வாரிசு என்றால், அவரின் மற்றொரு மனைவியின் மகனான கிம் பியோங் இல் மட்டுமே. எனினும், தற்போது, நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த நாட்டில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாகவே தெரிகிறது.