'பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் ஜாங் உன்...' 'யூகங்களுக்கு முற்றுப்புள்ளி...' 'புகைப்படத்துடன் வெளியான செய்தி...'
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாகவும், அவர் இறந்து விட்டதாவும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பங்கேற்கும் கிம் ஜாங் உன் இந்த ஆண்டு பங்கேற்கவில்லை. முக்கியமான நிகழ்வில் கிம் பங்கேற்காதது அவரது உடல்நலம் குறித்து சந்தேகத்தை கிளப்பியது.
அண்டை நானா தென்கொரியா கடந்த ஏப்ரல் 12ம் தேதி கிம் ஜாங் உன்னிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாக கூறியது. அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக கிம்மிற்கு இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தென்கொரியா சார்பில் கூறப்பட்டது.
கிம் உடல் நிலை குறித்து பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பரவின. கிம் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று கிம் ஜாங் உன் திடீரென பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியதாக மத்திய கொரியன் செய்தி ஏஜென்சி புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த சில வாரங்களாக கிம் பற்றி உலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு வடகொரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.