"பிள்ளைகளுக்கு வெடிகுண்டு, துப்பாக்கின்னு பெயர் வைக்க உத்தரவு போட்டாரா வடகொரிய அதிபர் ??.. பரவும் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேச பக்தியை வளர்க்கும் விதத்தில் பெயர்வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலக அளவில் வடகொரியா எப்போதுமே தனித்துவம் வாய்ந்த தேசமாக கருதப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். பொதுவாகவே, வடகொரியாவில் நடக்கும் எந்த அரசியல் செயல்பாடுகளும் வெளியுலகிற்கு தெரிவதில்லை. கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் உள்ள வட கொரியாவில் அதிபர் கிம் நினைத்ததே சட்டம். பல அதிரடி முடிவுகளை எடுக்கும் கிம் அதனை மின்னல் வேகத்தில் செயல்படுத்தவும் தயங்குவதில்லை. அந்த வகையில் கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளதாக சொல்லப்படும் சமீபத்திய உத்தரவு குறித்து தான் தற்போது உலகமே பரபரப்புடன் பேசிவருகிறது.
வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் நாட்டில் உள்ள பெற்றோர்கள் தேச பக்தியை வளர்க்கும் விதத்தில் தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, சோங் இல் (துப்பாக்கி), சுங் சிம் (விசுவாசம்), போக் இல் (வெடிகுண்டு) மற்றும் உய் சாங் (செயற்கைக்கோள்) போன்ற தேச பக்தியை பிரதிபலிக்கும் விதத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பெயர்வைக்க வேண்டும் என கிம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படி பெயர் வைக்க தவறும் நபர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, மென்மையான பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, எ ரி (நேசிக்கப்படுபவர்) சு மி (சூப்பர் பியூட்டி) போன்ற மென்மையான பெயர்களை வைப்பதை உடனடியாக நிறுத்துமாறு கிம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
கிம் ஜாங் உன் இப்படி அதிரடியான உத்தரவுகளை வெளியிடுவது இது முதல்முறை அல்ல. கடந்த வருடம் கிம்மின் தந்தை கிம் ஜாங் இல்-ன் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, 11 நாட்களுக்கு பொதுமக்கள் சிரிக்க கூடாது, மது அருந்த கூடாது போன்ற கட்டுப்பாடுகளை கிம் விதித்ததாக தகவல்கள் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்