மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்.. கணவர் இன்னொரு நாட்டில் பணய கைதி.. புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் தாக்குதல் குறித்து தான், தற்போது மொத்த உலகமும் பேசிக் கொண்டிருக்கிறது.
போர் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டுமென ரஷ்ய அதிபர் புதினுக்கு பல உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகிறது.
ஆனால், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தங்களின் ராணுவ படைகளைத் திரட்டிக் கொண்டு எதிர் தாக்குதலும் நடத்தி வருகிறது.
பதுங்கு குழியில் அடைக்கலம்
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் மக்கள், உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் பல இந்தியர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பினாலும், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து பதுங்குகுழி போன்ற இடங்களில் தங்கி, உயிரினைக் காத்து வருகின்றனர்.
புதுமண தம்பதி
இதில், கேரளாவைச் சேர்ந்த புதுமண தம்பதி சிக்கித் தவித்து வரும் துயரம், பலரையும் மனம் வருந்தச் செய்துள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தின் செப்பாடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அகில் (வயது 25). இவரது மனைவி பெயர் ஜிதினா (வயது 23). கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
பணய கைதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் அகில் வேலை செய்து வரும் நிலையில், ஜிதினா பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், Rawabee கப்பலில் அகில் பயணித்த போது, செங்கடலில் கிளிர்ச்சியாளர்களால் அந்த கப்பல் கடத்தப்பட்டது. கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக, அந்த கப்பலில் இருப்பவர்கள், ஏமனில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம், உக்ரைன் தலைநகரில் சிக்கியுள்ளார் மனைவி ஜிதினா. அங்குள்ள பதுங்கு குழி ஒன்றில், தன் உயிர் காக்க அவர் அடைக்கலம் தேடிக் கொண்டுள்ளார்.
குடும்பத்தினர் கோரிக்கை
ஏமனில் உள்ள சனா துறைமுகத்தில் இருந்து அகில் சில முறை, அவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளார். அங்கே அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அங்கிருந்து தப்ப முடியவில்லை என்றும் அகில் தெரிவித்துள்ளார். தற்போது, அகிலின் மனைவி ஜிதினாவும் உக்ரைனில் சிக்கித் தவிப்பதால், இருவரையும் மீட்டுத் தர வேண்டுமென அகில் - ஜிதினாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், அகிலை மீட்டுத் தர, மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், இதனால் விரைவில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர், ரயில் நிலையத்திற்கு செல்லும் போது, ரஷ்ய தாக்குதலால் உயிரிழந்த சம்பவமும் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்