'12 வயது சிறுமிக்கு வரதட்சணையாக 4 மாடுகள்'... 'கொரோனா ரூபத்தில் வந்த வறுமை'... 2 முறை சிறுமிக்கு நடந்த கொடுமை!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா ரூபத்தில் வந்த வறுமை என்ற அரக்கன் பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் வாழ்க்கையில் வினையாக மாறியுள்ள சோகம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் 18 வயதிற்குட்பட்ட ஒருவரைத் திருமணம் செய்வது என்பது சட்டப்படி குற்றமாகும். இந்த சூழ்நிலையில் தலைநகர் நைரோபியின் மேற்கே நரோக் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். அங்கு கொரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அவர் வீட்டிலிருந்துள்ளார். அவரது தந்தைக்கும் வேலை இல்லாததால், வீட்டில் வறுமை தலைவிரித்தாடியுள்ளது. இந்நிலையில் தனது 12 வயது மகளை, 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க அந்த தந்தை திட்டமிட்டுள்ளார்.
இதற்கு வரதட்சணையாக 4 மாடுகளை வழங்க அந்த 51 வயதுடைய நபர் முன்வந்தார். இதையடுத்து அந்த நபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், அந்த சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றார். இருப்பினும் அவரது தந்தை மீண்டும் 35 வயதுடைய நபருக்கு அந்த சிறுமியைத் திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் இந்த தகவலை அறிந்த சிறுவர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமி மீட்கப்பட்டார்.
இதற்கிடையே சிறுமியைத் திருமணம் செய்த 51 வயது நபர் போலீசாருக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார். தற்போது தலைமறைவாகிவிட்ட தந்தை மற்றும் சிறுமியைத் திருமணம் செய்த இரண்டு நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா காரணமாகப் பல குடும்பங்கள் பல நாட்களாக கடும் பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இரண்டு அல்லது மூன்று மாடுகளை வரதட்சணையாகப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்போது, இதுபோன்ற நடவடிக்கைகளில் பெற்றோர்கள் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்