கர்நாடகா டூ வியட்நாம்.. கடல் கடந்த காதல்.. கைகோர்த்து அசத்திய ஜோடி.. ஒரு ரொமான்டிக் சுவாரஸ்யம்.
முகப்பு > செய்திகள் > உலகம்காதல் என்ற அழகான உணர்விற்கு மதம், மொழி, எல்லை என எந்த வரைமுறையும் கிடையாது என்று கூறுவார்கள். அப்படி ஒரு கூற்று தான் தற்போது உண்மையாக மாறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் பிரதீப். வியட்நாம் நாட்டில், யோகா ஆசிரியராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அந்த நாட்டைச் சேர்ந்த குயூன் டிசங் என்ற இளம்பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்திக்க நேர்ந்துள்ளது. ஆரம்பத்தில், இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். அதன் பிறகு, நாளடைவில் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பியதன் படி, தங்களது பெற்றோர்களிடம், தங்களது காதலை எடுத்துக் கூறி, திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதற்கு இருவரது பெற்றோர்களும் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. உடனடியாக, திருமணம் நடத்தவும் இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
பாரம்பரிய முறை
தனது திருமணத்திற்காக மணப்பெண் குயூன் டிசங், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்திலுள்ள காதலரின் கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். கொரோனா கட்டுப்பாடு விதிகள் காரணமாக, அவரது பெற்றோர்களால் இந்தியாவிற்கு வர முடியவில்லை. பாரம்பரிய முறைப்படி, புடவை அணிந்திருந்த குயூன் டிசங், மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் காணப்பட்டார். மணப்பெண்ணின் பெற்றோர்கள் வீடியோ கால் மூலம் புதுமண தம்பதியருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மிகவும் பாரம்பரிய முறைப்படி, பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டதுடன், பஜ்ஜி, சாம்பார், பூந்தி, ரொட்டி உள்ளிட்ட பூர்விக உணவு வகைகள், திருமண விருந்தில் இடம் பிடித்திருந்தது. மேலும், இந்த புது காதல் ஜோடி, விரைவில் வியட்நாம் திரும்பிச் செல்லவுள்ளனர்.
எதிர்பார்க்கவில்லை
தனது திருமணம் பற்றி பேசிய மாப்பிள்ளை பிரதீப், 'நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். ஆரம்பத்தில், என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக வேண்டி, என்னுடைய சிறிய கிராமத்தில் வருவாள் என நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. இது பற்றி நான் அவளிடம் கேட்ட போது, உடனே அவள் ஒப்புக் கொண்டாள். அவளது பெற்றோர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அனைத்தும் நல்ல படியாக நடந்து முடிந்தது. அவள் கன்னடம் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறாள். அடுத்த முறை, நாங்கள் எங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் போது, அவள் நிச்சயம் கன்னடத்தில் தான் பேசுவாள்' என மகிழ்ச்சியுடன் பிரதீப் குறிப்பிட்டார்.
பிள்ளைகளின் சந்தோஷம்
இந்த திருமணம் பற்றி பிரதீப்பின் பெற்றோர்கள் பேசுகையில், 'எங்களின் மருமகள் ஒரு சிறந்த பெண்ணாக தான் தெரிகிறாள். எங்களது மகன் சந்தோஷமாக உள்ளார். அது தான் எங்களுக்கு வேண்டும். பிள்ளைகளின் சந்தோஷமே, பெற்றோர்களுக்கும் சந்தோஷம். மருமகளின் பெயரை எங்களால் சரிவர உச்சரிக்க முடியவில்லை. இதனால், பிரீத்தி என நாங்கள் அழைத்து வருகிறோம். எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது' என தெரிவித்துள்ளனர்.
ஜாதி, மதம் என பல விஷயங்கள், காதலுக்கு தடையாக இன்றளவும் பார்க்கப்படும் நிலையில், நாடு, கடல் கடந்து, பிள்ளைகளின் விருப்பத்திற்காக, எந்த எதிர்ப்பதையும் பெற்றோர்கள் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்