‘திடீர் திருப்பம்’!.. டிரம்ப் தடை விதித்த இரண்டு ‘App’-க்கு அனுமதி.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதித்த இரண்டு செயலிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் டிக்டாக் (TikTok) மற்றும் வீ சாட் (WeChat) செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதிவியேற்றார். இவர் தலைமையிலான நிர்வாகமும் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை தொடரும் என முந்தைய நிர்வாகத்தின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளை பொதுமக்கள் புதிதாக பதிவிறக்கம் செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த தடைகளை திரும்ப பெறுவதாக அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த செயலிகளை பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு அம்சங்களை ஆராய, வர்த்தகப் பிரிவு மற்றும் பிரத்யேக பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிரம்பின் தடை உத்தரவுக்கு உள்ளூர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளின் தடையை நீக்கியுள்ளார்.
மற்ற செய்திகள்